திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுக்களுடன் வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர் களின் பசியைப் போக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள ‘இறைவனின் சமையலறை’ முன்னுதாரண திட்டமாக மாறி யுள்ளது.
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு வாரமும் திங்கள் கிழமைகளில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம் நடைபெற்று வருகிறது. கரோனா பொது முடக்கம் அறிவிப்பால் நிறுத்தப் பட்டிருந்த குறைதீர்வு கூட்டம் கடந்த சில வாரங்களாக குறை தீர்வு நாள் முகாமாக நடைபெற்று வருகிறது. ஆட்சியர் அலுவல கத்தில் வைக்கப்பட்டுள்ள குறை தீர்வு பெட்டியில் பொதுமக்கள் மனுக்களை போடுகின்றனர். மேலும் வாட்ஸ்-அப் மூலமாகவும் பொதுமக்கள் புகார்களை அளிக்கின்றனர். இந்த குறைதீர்வு நாள் முகாமுக்கு மனுக்கள் அளிக்க வரும் பொதுமக்கள் சுமார் 80 முதல் 110 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வருகின்றனர். இவர்களில் மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள், முதி யவர்கள் என பல்வேறு தரப்பினரும் சிரமத்துடன் வந்து செல்கின் றனர். இவர்களுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் ‘இறை வனின் சமையலறை’ கட்டிடம் புதிதாக கட்டப்பட்டுள்ளது.
முதல் சமையற் கூடம்
தமிழகத்தில் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இந்த இறைவனின் சமையலறையில் திங்கட்கிழமை தோறும் இலவச உணவு வழங்கப்படும். இங்கு, ஒரே நேரத்தில் ஆயிரம் பேருக்கு உணவு சமைத்து வழங்க முடியும். இறைவனின் சமையலறைக்கு உழவர் சந்தை விவசாயிகள் காய்கறி, அரிசி மூட்டைகளையும், கூட்டுறவு கற்பகம் அங்காடிகளின் சமூக பங்களிப்பு திட்டத்தில் மளிகைப் பொருட்கள், காஸ் விநியோகஸ்தர்கள் சங்கம் சார் பில் காஸ் அடுப்பும், சிலிண்டர் களையும் வழங்க முன்வந்துள் ளனர். அருகில் உள்ள அங்கன் வாடி, அரசு விடுதி சமையலர் கள் சுழற்சி முறையில் திங்கள் கிழமைகளில் 2 மணிநேரம் சமை யல் பணியை செய்ய உள்ளனர்.
இறைவன் அளித்த உணவு
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி, ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ஆட்சியர் அலுவலகத்துக்கு மனுக்கள் அளிக்க வரும் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் நண்பகல் 12 மணிக்குப் பிறகு சோர்ந்து போய் மரங்களின் நிழல்களில் காத்திருப்பார்கள். இங்கு ஏழை கள்தான் வருகின்றனர். அவர் களின் வயிறும், மனசும் நிறைவாகசெல்ல நான்கு அரசு துறை களுடன் இணைந்து இந்த திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
ஏற்கெனவே, மாற்றுத்திறனாளி களுக்கு தன்னார்வலர்கள் மூலம் உணவுப் பொட்டலம் வழங்கும் பணி போதுமானதாக இல்லை என்பதால் உணவு சமைத்து வழங்க முடிவு செய்யப்பட்டது. யாரோ உணவு அளித்தார்கள் என்று இல்லாமல் ‘இறைவன்’ வழங்கிய உணவாக எல்லா மதத்தினருக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக இறை வனின் சமையலறை கட்டப் பட்டுள்ளது’’ என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
மாவட்ட ஆட்சியரின் நடவடிக் கைக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் சமூக ஆர்வலர் சையத் ஜஹிருத்தீன் தனது மகன், மகள் சேர்த்து வைத்திருந்த உண்டியல் பணம் மற்றும் தந்தையின் சேமிப்பு என ரூ.5 ஆயிரம் வழங்க முன்வந்துள்ளார். ‘‘மாவட்ட ஆட்சியர் தொடங்கியுள்ள இறைவனின் சமையலறை இப்போதைய நிலையில் மாற்றுத் திறனாளிகள், முதியோர்களுக்கு அவசியமானதாக உள்ளது’’ என்றார்.