கோப்புப்படம் 
தமிழகம்

மின்சாரத்தை காணவில்லை என புகார்

செய்திப்பிரிவு

திருப்பூர் தாராபுரம் சாலை செட்டிபாளையம் அழகாபுரி நகரைச் சேர்ந்தவர் என்.ஜெயலட்சுமி. இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது வீட்டுக்கு ஒருமுனை மின் இணைப்பு வழங்க கோரி செட்டிபாளையத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் விவரம் கேட்டுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் இணைப்பு பெற ரூ.10 ஆயிரம் வரை செலவாகும் என கூறியதாக தெரிகிறது.

இதனையடுத்து கடந்த 14-ம் தேதி இணையவழி மூலமாக மின் இணைப்புக்கு விண்ணப்பம் செய்துள்ளார். இணைப்புக்கான முன்பணத் தொகையாக ரூ.2,818 செலுத்தியுள்ளார். மின் இணைப்பு வழங்கப்படாத நிலையில், கடந்த 21-ம் தேதி அவரது வீட்டுக்கு இணைப்பு அளிக்கப்பட்டுவிட்டதாக மின்வாரியத்திலிருந்து அலைபேசிக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ஜெயலட்சுமி, கொடுக்காத மின் இணைப்புக்கு மின் கட்டண தொகை ரூ.10-ஐ இணையவழியில் செலுத்திய ரசீதுடன், தனது வீட்டுக்கு அளிக்கப்பட்ட மின்சாரத்தை காணவில்லை என்று இணையவழி சேவை மூலமாக திருப்பூர் மாநகர காவல் துறையில்நேற்று முன்தினம் புகார் அளித்துள்ளார்.

SCROLL FOR NEXT