திருப்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவமனையின் கரோனா சிகிச்சைப் பிரிவில், மின் தடையால் ஆக்ஸிஜன் செல்வது தடைபட்டு கெளரவன் (59), யசோதா (67) ஆகியோர் நேற்று முன்தினம் உயிரிழந்ததாக புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், திருப்பூர் பூலுவபட்டி மும்மூர்த்தி நகரைச் சேர்ந்த மோகன்குமார், ஆட்சியர் க.விஜயகார்த்திகேயனிடம் நேற்று மனு அளித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி எனது பெரியம்மா அனுராதா(45) ஆஸ்துமா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 21-ம் தேதி உடல்நிலை மோசமானதால், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு, சிகிச்சை தரப்பட்டது.
மறுநாள் காலை முதல் மின்தடை ஏற்பட்டதால், செயற்கை சுவாசக் கருவி செயல்படவில்லை. மூச்சுத்திணறலால் அவதிப்பட்ட அவர், மாலை உயிரிழந்தார். மின் தடை காரணமாக உயிரிழந்த அனுராதாவும் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதுடன், சிகிச்சை அளித்த மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மருத்துவமனை கண்காணிப்பாளர் கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘மருத்துவமனையில் ஆக்ஸிஜன், வென்டிலேட்டர் என அனைத்து வசதிகளும் உள்ளன. அனுராதா இறந்தது குறித்து விசாரணை நடத்தப்படும்’’ என்றார்.