சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக 10 மாவட்ட நீதிபதிகளை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள மொத்த நீதிபதிகளின் எண்ணிக்கை 75. இதில் தற்போது 54 நீதிபதிகள் பணியில் உள்ளனர். 22 நீதிபதிகள் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இந்தப் பதவிக்கு 10 மாவட்ட நீதிபதிகளின் பெயரை உயர் நீதிமன்ற கொலீஜியம் உச்ச நீதிமன்றத்துக்கு பரி்ந்துரை செய்திருந்தது.
இந்தப் பட்டியலில் மாவட்ட நீதிபதிகளாக பணிபுரிந்து வரும் ஜி.சந்திரசேகரன், ஏ.ஏ.நக்கீரன், சிவஞானம் வீராசாமி, இளங்கோவன் கணேசன், ஆனந்தி சுப்பிரமணியன், கண்ணம்மாள் சண்முகசுந்தரம், சாத்திகுமார் சுகுமார குரூப், முரளி சங்கர் குப்புராஜூ, மஞ்சுளா ராஜராஜூ நல்லய்யா, தமிழ்செல்வி டி.வளையபாளையம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்தப் பரிந்துரையை ஏற்று உயர் நீதிமன்ற நீதிபதிகளாக இவர்களை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி இந்த 10 மாவட்ட நீதிபதிகளும் விரைவில் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக பதவியேற்க உள்ளனர். இதற்கான ஒப்புதலை குடியரசுத் தலைவர் விரைவில் பிறப்பித்த உடன் நடைமுறைகள் முடிந்து இவர்கள் 10 பேரும் உயர் நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப்படுவர். இந்த 10 பேரும் பதவியேற்றால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 64 ஆக உயரும். எஞ்சிய இடங்களுக்கு உயர் நீதிமன்றத்தில் பணியாற்றி வரும் வழக்கறிஞர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதற்கான அறிவிப்பும் விரைவில் வெளிவரும் என்பதால் வழக்கறிஞர்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பு நிலவிவருகிறது.