அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கு மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
பாஜக மகளிர் அணி மாநில செயற்குழு கூட்டம் சென்னை எழும்பூரில் நேற்று நடந்தது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், மகளிர் அணி தேசியத் தலைவர் விஜயா ரஹாத்கர், மாநிலத் தலைவர் எஸ்.மீனாட்சி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது செய்தியாளர்களிடம் எல்.முருகன் கூறியதாவது:
அதிமுகவில் சசிகலாவை இணைப்பதற்கு பாஜக மத்தியஸ்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகும் செய்திகள் தவறானவை. அப்படி எந்த ஒரு முயற்சியிலும் பாஜக ஈடுபடவில்லை.
விவசாயிகள் உற்பத்தி செய்யும்விளைபொருட்களுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக வேண்டும் என்பதற்காகவே வேளாண் திருத்தச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதன்மூலம் தங்களது விளைபொருட்களுக்கு விவசாயிகளே விலை நிர்ணயம் செய்ய முடியும். நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்து பயன்பெற முடியும். ஆனால், இந்த உண்மைகளை மறைத்து, இந்த சட்டங்கள் தொடர்பாக மக்களிடம் தவறான புரிதலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்து வருகின்றன.
மத்திய அரசு எந்த சட்டம் கொண்டு வந்தாலும், கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பதை மட்டுமே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்து வருகிறார். இதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.
கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி பாஜக போட்டியிட்ட தொகுதி என்பதால் இடைத்தேர்தலிலும் பாஜகவே போட்டியிடும். அதில் சந்தேகம் இல்லை. யார் வேட்பாளர் என்பதை கட்சியின் தேசியத் தலைமை முடிவு செய்யும். வரும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் பாஜக கணிசமான இடங்களில் வெல்லும். சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் அமர்வது உறுதி.
இவ்வாறு அவர் கூறினார்.