தமிழகத்தில் ‘ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தை அக்டோபர்1-ம் தேதி முதல் அமல்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
மக்கள் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் ‘ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு’திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டே இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்தஆண்டு தொடக்கத்தில் இத்திட்டத்தை அமல்படுத்துவதாக இருந்தது. கரோனா பாதிப்பு காரணமாக இலவச பொருட்கள் விநியோகம் நடந்ததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தை வரும்அக்டோபர் 1-ம் தேதி முதல்செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது.
இதில் துணை முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன், செங்கோட்டையன், செல்லூர் ராஜு, ஜெயக்குமார், காமராஜ் உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமைச் செயலர் க.சண்முகம், நிதித்துறை செயலர் ச.கிருஷ்ணன், உணவுத் துறை செயலர் தயானந்த் கட்டாரியா உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இத்திட்டத்தை செயல்படுத்தும்போது, கடைகளுக்கு ஒதுக்க வேண்டிய கூடுதல் பொருட்கள், வெளி மாநிலத்தவர்களுக்காக கூடுதல் ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. விரைவில், இதுதொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இத்திட்டம், ஆதார் அடிப்படையில் செயல்படுத்தப்படுவதால், ‘பிஓஎஸ்’ எனப்படும் விற்பனை முனைய இயந்திரங்களில் விரல் ரேகை பதிவு செய்யும் வசதி இணைக்கப்பட்டு, அனைத்து ரேஷன் கடைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம், குடும்ப அட்டைதாரர்கள் மட்டுமே சென்று பொருட்கள் வாங்க முடியும்.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கெனவே இத்திட்டம் சோதனை முறையில் அமல்படுத்தப்பட்டு, அந்த மாவட்டத்துக்குள் எங்கு வேண்டுமானாலும் பொருட்கள் வாங்கிக் கொள்ளும் வசதி உள்ளது குறிப்பிடத்தக்கது.