ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் நடந்து வருவது தொடர்பாக தமிழகத்தில் சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகின்றன. இப்போட்டியை ஆன்லைனில் அதிகம் பேர் பார்ப்பதால் அதில் தற்போது அதிக அளவில் சூதாட்டங்கள் நடந்து வருகின்றன.
கடந்த 2013-ம் ஆண்டில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டம் பரபரப்பாக பேசப்பட்டது. பல முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கை தமிழக சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர். அதேபோல தற்போதும் பெரிய அளவில் சூதாட்டம் நடந்து வருவதாக கூறப்படுகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பெங்களூருவில் நேற்று முன்தினம் 6 பேர் கைது செய்யப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, தமிழகத்திலும் ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக தமிழக சைபர் கிரைம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆன்லைனில் கிரிக்கெட் பார்ப்பவர்களை, சூதாட்ட தரகர்கள் ஆன்லைன் மூலமாகவே தொடர்பு கொண்டு, சூதாட்டத்தில் பங்கேற்க வைக்கின்றனர். ரூ.1,000 முதல் பல லட்சம் வரை பணம் கட்டி, ஏராளமானோர் சூதாட்டத்தில் பங்கேற்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். சூதாட்டம் முழுவதும் ஆன்லைனில் நடப்பதால், தமிழகம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள சைபர் கிரைம் போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.