தமிழகம்

சென்னையில் அடுத்தடுத்து 3 பேரை கத்தியால் தாக்கி வழிப்பறி: சிசிடிவி காட்சி மூலம் போலீஸார் விசாரணை

செய்திப்பிரிவு

சென்னையில் அடுத்தடுத்து 3பேரை கத்தியால் தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டு தப்பியவர்களை சிசிடிவியில் பதிவான காட்சிகள் மூலம் போலீஸார் தேடி வருகின்றனர்.

சென்னை நுங்கம்பாக்கம், புஷ்பா நகரைச் சேர்ந்தவர் ஏழுமலை (72 ). தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். நேற்று காலை இவர் வழக்கம்போல் வீட்டிலிருந்து புறப்பட்டு பணிக்குச் சென்று கொண்டிருந்தார்.

அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அவரிடம் இருந்த செல்போனைபறிக்க முயன்றனர். அவர் கொடுக்க மறுக்கவே மறைத்து வைத்திருந்த கத்தியால் ஏழுமலையின் தலையில் தாக்கினர். காயமடைந்த ஏழுமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

இதேபோல், நுங்கம்பாக்கம், டிபிஐ வளாகம் அருகே நடந்து சென்றுகொண்டிருந்த வேன் ஓட்டுநர் விக்டர் (52) என்பவரை கத்தியால் தாக்கி செல்போன் பறிக்க முயன்றனர். விக்டரின் கூச்சல் சத்தம் கேட்டு நடைப்பயிற்சி சென்றவர்கள் ஓடி வரவே வழிப்பறி கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் தப்பினர்.

சிந்தாதிரிப்பேட்டையில்...

இதேபோல் சிந்தாதிரிப்பேட்டை பிஎஸ்என்எல் அலுவலகம்அருகே நேற்று அதிகாலை சாலையோரம் நடந்து சென்ற கூரியர் நிறுவன ஊழியர் முகம்மது சாஹிப்பை (59) இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் கத்தியால் தலையில் தாக்கி விட்டு அவரிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்றனர். படுகாயமடைந்த அவருக்கு தலையில் 12 தையல்கள் போடப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக போலீஸார் சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் 3 பேரையும் வெட்டி வழிப்பறியில் ஈடுபட்டது ஒரே கும்பல் என தெரியவந்தது. தலைமறைவாக உள்ள அவர்களை போலீஸார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

SCROLL FOR NEXT