இந்து கோயில்கள் யாரிடம் இருக்கவேண்டும் என்பது தொடர்பாக தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய அறிவுரைகளை வழங்கி உள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக் கோயிலில் தூய்மைப் பணிதொடர்பான டெண்டர் அறிவிப்பை ரத்து செய்துள்ள உயர் நீதிமன்றம்,பழநி கோயிலுக்கு விரைவில் அறங்காவலர் குழுவை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
பழநி தண்டாயுதபாணி சுவாமிகோயிலில் தூய்மைப் பணி தொடர்பாக கோயில் செயல் அலுவலர் மற்றும் தக்கார் 20.8.2020-ல் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பை ரத்துசெய்யக்கோரி, டி.ஆர். ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
தமிழகத்தில் 2011-ல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கோயில்களில் அறங்காவலர்களாக இருந்தவர்கள் அப்பதவியில் இருந்து விலகினர். அதன் பிறகு, இப்போது வரைஅறங்காவலர் குழு நியமிக்கப்படவில்லை. கோயில் நிர்வாகத்தைக்கவனிக்க செயல் அலுவலர்களையே தக்காராக நியமித்து 10.6.2011- ல் அரசு உத்தரவிட்டது.
அதன்படி, செயல் அலுவலர்கள் 9 ஆண்டுகள் 3 மாதங்களாகதக்கார்களாகவும் செயல்படுகின்றனர். சட்டப்படி செயல் அலுவலர்கள் நீண்ட காலத்துக்கு அலுவல்சாரா தக்காராக செயல்பட முடியாது. அவ்வாறு செயல்படுவதை நீதிமன்ற கவனத்துக்கு கொண்டுவர பக்தர்களுக்கு உரிமையுள்ளது.
நீதிமன்றத்தின் கடமை
இந்த வழக்கில் மனுதாரர் வணிகநோக்கில் நீதிமன்றத்தை அணுகாமல், பக்தர் என்ற முறையிலேயே நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டியுள்ளார். செயல் அலுவலர் தக்காராகவும் செயல்படுவதை எதிர்த்துஅவர் மனு தாக்கல் செய்யவில்லை.இருப்பினும், இவ்வழக்கில் கோயிலின் நலன் சார்ந்திருக்கும்போது வழக்கை சாதாரணமாக அணுகி கடந்து போக முடியாது. கோயில் நிர்வாகம் சட்டப்படி நடப்பதையும் உறுதி செய்ய வேண்டியது நீதி மன்றத்தின் கடமை.
கோயில் தக்கார் டெண்டர் அறிவிப்பை வெளியிட முடியாது. இதனால் தூய்மைப்பணி தொடர்பாகதக்கார் வெளியிட்ட டெண்டர் அறிவிப்பாணை ரத்து செய்யப்படுகிறது. பழநி மலைக் கோயிலுக்குமிக விரைவில் அறங்காவலர் குழுவை தமிழக அரசு நியமிக்க வேண்டும்.
அறங்காவலர் குழு அவசியம்
ஆந்திரா மாநிலத்தில் கோயில்ஒன்றில் தீ விபத்து நிகழ்ந்ததையடுத்து, ஆட்சியாளர்கள், அரசியல்வாதிகளால் கோயில் நலனுக்கு பலனில்லை என்ற நிலை வரும்போது,மதிப்புமிகுந்த இந்துக்கள் மற்றும் நன்னடத்தை உள்ளவர்கள் பங்கேற்கும் வகையில் அறங்காவலர் குழுவை மாற்றி அமைக்க வேண்டும் என ஆங்கில நாளிதழ் ஒன்றில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. இது ஆந்திராவுக்கு மட்டும் அல்ல; தமிழகத்துக்கும் பொருந்தும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.