கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பெருஞ்சாணி அணை 71 அடியை தாண்டியுள்ள நிலையில் அணைப் பகுதி, மற்றும் குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கபபட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தொடர்மழை பெய்து வருகிறது. தற்போது வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 3 நாட்களாக கனமழை பெய்தது.
மழையால் ஆறு, கால்வாய்களில் வெள்ளபெருக்கு ஏற்பட்டன. 1800க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி மறுகால் பாய்ந்து வருகிறது. கன்னிப்பூ சாகுபடி பயிர்கள் நல்ல மகசூலுடன் உள்ள நிலையில் அறுவடை நேரத்தில் பெய்த மழையால் 2500 ஹெக்டேருக்கும் மேற்பட்ட நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
இவற்றை அறுவடை செய்து கரைசேர்க்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர். எனவே சேதமான நெற்பயிர்களுக்கு இழப்பீடு தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அணைகளின் நீர்பிடிப்பு பகுதியான பாலமோரில் அதிகபட்சமாக 61.8 மிமீ., மழை பெய்திருந்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1709 கனஅடி தண்ணீரும், பெருஞ்சாணி அணைக்கு 1974 கனஅடி தண்ணீரும் உள்வரத்தாக வருகிறது. இதனால் 48 அடி கொள்ளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 34 அடியாக உயர்ந்துள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் இன்று 71 அடியாக உயர்ந்தது. வழக்கமாக முழு கொள்ளளவின் 7 அடிக்கு முன்பாகவே பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படும்.
அதன்படி பெருஞ்சாணி அணைக்கு அதிக நீர்வரத்து வருவதால் 250 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மழை அதிகமானால் எந்நேரத்திலும் அதிகமான கனஅடி தண்ணீர் திறந்துவிட வாய்ப்புள்ளது.
எனவே அணைப்பகுதியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை நீர்ஆதார அதிகாரிகள் பெருஞ்சாணி அணை பகுதிக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர். அணையின் கரைப்பகுதியில் உள்ள மக்கள் பாதுகாப்புடனும், எச்சரிக்கையுடனும் இருக்குமாறு தண்டோரா போட்டு வலியுறுத்தப்பட்டது.
இதைப்போன்றே பெருஞ்சாணி அணை பாய்ந்தோடும் தாமிரபரணி ஆற்றங்கரையோர பகுதி மக்களுக்குள் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. கோதையாற்றிலும் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளதால் திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ஏற்கனவே சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் யாரும் அருவிப் பகுதியில் சென்று விடாமல் இருக்கும் வகையில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தொடர் மழையால் சிவலோகம் எனப்படும் சிற்றாறு இரண்டில் 58 மிமீ., சிற்றாறு ஒன்றில் 40, பேச்சிப்பாறையில் 21, பெருஞ்சாணியில் 31, புத்தன்அணையில் 30, சுருளோட்டில் 21, கோழிப்போர்விளையில் 21, முக்கடல் அணையில் 15, முள்ளங்கினாவிளையில் 18, அடையாமடையில் 21 மிமீ., மழை பெய்தது.
மழையால் நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் முக்கடல் அணை 20 அடியாக உயர்ந்துள்ளது. சூறைகாற்றுடன் பெய்த மழையால் மலை கிராமங்கள், மற்றும் கிராம பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. பேச்சிப்பாறையில் மின்கம்பம் சாய்ந்து சாலையில் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டு சுற்றுப்புற கிராமங்கள் இருளில் மூழ்கியது.
மழையால் சூறைகாற்றும் வீசுவதுடன் கடல் சீற்றமும் உள்ளதால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை மீனவர்கள் 3-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை. இதைப்போலவே மாவட்டம் முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.