பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் கரோனா பாதிப்பு 25 ஆயிரத்தை நெருங்கியது; புதிதாக 543 பேருக்குத் தொற்று: மேலும் 8 பேர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 543 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25 ஆயிரத்தையும், உயிரிழப்பு 500-ஐயும் நெருங்கியுள்ளது.

இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 23) கூறும்போது, "புதுச்சேரியில் 5,642 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி-353, காரைக்கால்-151, ஏனாம்-14, மாஹே-25 என மொத்தம் 543 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப்படம்

மேலும், புதுச்சேரியில் 7 பேர், ஏனாமில் ஒருவர் என 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 481 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.99 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 24 ஆயிரத்து 227 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் புதுச்சேரியில் 2,488 பேர், காரைக்காலில் 428 பேர், ஏனாமில் 100 பேர், மாஹேவில் 16 பேர் என 3,032 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,452 பேர், காரைக்காலில் 161 பேர், ஏனாமில் 167 பேர், மாஹேவில் 41 பேர் எனமொத்தம் 1,821 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,853 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று புதுச்சேரியில் 322 பேர், காரைக்காலில் 69 பேர், ஏனாமில் 40 பேர், மாஹேவில் 8 பேர் என மொத்தம் 439 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 18 ஆயிரத்து 893 (77.98 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1 லட்சத்து 49 ஆயிரத்து 501 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 20 ஆயிரத்து 366 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.

தற்போது இறந்த 8 பேரில் 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே உயிரிழந்துள்ளனர். இதற்குக் காரணம் நோய் முற்றிய நிலையில் மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு வந்ததுதான். அதனால்தான் அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.

எனவே, கரோனா அறிகுறி தோன்றினாலும், உடலில் லேசான மாற்றம் இருந்தாலும் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். மேலும், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்தும், தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தும், கைகளை அடிக்கடி கழுவுவதையும் கடைப்பிடிக்க வேண்டும். முதியோர்களும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT