புதிய சிற்றுந்து சேவையை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். அருகில் மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் உள்ளிட்டோர். 
தமிழகம்

கரூரில் இரு புதிய வழித்தடங்களில் 2 புதிய சிற்றுந்து சேவை: அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்

க.ராதாகிருஷ்ணன்

கரூரில் இரு புதிய வழித்தடங்களில், இரு புதிய சிற்றுந்து சேவைகளை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாக புலியூர் செல்லும் வகையில் இரு புதிய வழித்தடங்களில் அரசு புதிய இரு சிற்றுந்துகள் (Small Bus) சேவை தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் தலைமையில் கரூர் பேருந்து நிலையத்தில் இன்று (செப். 23) நடைபெற்றது. போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புதிய சிற்றுந்துகளைப் பார்வையிட்டு கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து லைட்ஹவுஸ், சுங்கவாயில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காந்திகிராமம் வழியாக புலியூருக்கு புதிய வழித்தடத்தில் ஒரு சிற்றுந்தும், கரூர் பேருந்து நிலையத்திலிருந்து பழைய அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், பசுபதிபாளையம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காந்திகிராமம் வழியாக புலியூருக்கு மற்றொரு வழித்தடத்தில் இன்னொரு சிற்றுந்தும் இயக்கப்படுகிறது.

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து காந்திகிராமத்துக்கு முதல் வழித்தடத்தில் காலை 9, 10.15, 11.30, மதியம் 1, 2.20, 3.40, மாலை 5 மணிக்கும், காந்திகிராமத்திலிருந்து கரூருக்கு காலை 6.45, 8.20, 9.35, 10.50, மதியம் 12.05, 1.40, 3, மாலை 4.20, 5.35, இரவு 7.10, 8.50 ஆகிய நேரங்களிலும், கரூரிலிருந்து புலியூருக்கு காலை 6, 7.20 மாலை 6.10, இரவு 7.50 ஆகிய நேரங்களிலும், புலியூரிலிருந்து கரூருக்கு காலை 6.30, 8.10, இரவு 7, 8.40 ஆகிய நேரங்களிலும் சிற்றுந்து புறப்படும்.

கரூர் பேருந்து நிலையத்திலிருந்து காந்திகிராமத்துக்கு காலை 9.50, 11.10, மதியம் 12.30, 1.50, 3.10, மாலை 4.30 மணிக்கும், காந்திகிராமத்திலிருந்து கரூருக்கு காலை 7.30, 9.10, 10.30, 11.50 மதியம் 1.10, 2.30, 3.50, மாலை 5.10, 6.50, இரவு 8.20 ஆகிய நேரங்களிலும், கரூரிலிருந்து புலியூருக்கு காலை 6.25, 8.10 மாலை 5.50, இரவு 7.25 ஆகிய நேரங்களிலும், புலியூரிலிருந்து கரூருக்கு காலை 7.15, 9, மாலை 6.40, இரவு 8.10 ஆகிய நேரங்களிலும் சிற்றுந்து புறப்படும்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அரசுப் பேருந்து சேவை தொடங்க வேண்டும் என நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் எழுந்த நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செல்லும் சாலைகள் மிக குறுகியதாக இருந்ததால் அதற்கேற்ற வகையில் அரசு இரு சிற்றுந்துகள் சேவையைத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக கரூரில் நகர வழித்தடத்தில் சிற்றுந்துகள் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றி சிற்றுந்து சேவை தொடங்கப்பட்டது.

SCROLL FOR NEXT