தமிழகம்

மதுரையில் புதிய வணிக வளாகம் திறக்கத் தடை கோரி வழக்கு

கி.மகாராஜன்

மதுரையில் பொதுப்பாதையை ஆக்கிரமித்து புதிதாகக் கட்டப்பட்டுள்ள வணிக வளாகத்தைத் திறக்க தடை கோரிய வழக்கில் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாவட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் எம்.சோலைக்கண்ணன், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

மதுரை வில்லாபுரம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய காலனியில் 5 மாடியில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம், பொதுப்பாதை மற்றும் கிருதுமால் நதியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

மேலும் அவசர வழி, கார் நிறுத்துமிடம், தீத்தடுப்பு வசதி, அடிப்படை வசதிகள் இல்லை.

வணிக வளாகம் அமைந்துள்ள சாலை மதுரை விமான நிலையத்தை தென்மாவட்டங்களுடன் இணைக்கும் சாலையாகும்.

இதனால் கட்டிடம் திறக்கப்பட்டு அசம்பாவிதம் எதாவது ஏற்பட்டால் பெரியளவில் பாதிப்பு நிகழ வாய்ப்புள்ளது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட வேண்டும். அதுவரை கட்டிடத்தை திறக்க தடை விதிக்க வேண்டும்.

இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர்கள் நீலமேகம், முகமதுரஷ்வி வாதிட்டனர். மனு தொடர்பாக கூடுதல் விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT