இன்னும் 70 நாட்களில் ‘2ஜி ’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பு வரவுள்ளதால், தமிழகத்தில் இரண்டு மக்களவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று, பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்தார்.
திருப்பூர் வடக்கு மாவட்ட பாஜக நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் ஹெச்.ராஜா கூறும்போது, "தற்போதைய சூழலில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பொருட்கள் வருவதை தடுக்க இயலாது. விளைபொருட்கள் வணிகம், வர்த்தகம் ஊக்குவித்தல் மற்றும் உதவுதல் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியுள்ளது. ஆனால், உள்நாட்டில் விவசாயி தன் விளைபொருளை விருப்பப்பட்ட சந்தைக்கு எடுத்துச் செல்வது என்பதை எதிர்ப்பது ஏன்? இந்த சட்டத்தில், விவசாயிகள் நலனை பாதிக்கும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. குறைந்தபட்ச ஆதரவு விலை எந்த காலகட்டத்திலும் நீக்கப்படாது என்பதை பிரதமர் தெளிவாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சுயசார்பு இந்தியா திட்டம் மூலமாக விவசாய உள்கட்டமைப்பு வசதிக்காக, ரூ. ஒரு லட்சம் கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. சுதந்திர இந்திய வரலாற்றில், இதுவரை இல்லாத அளவில் கட்டமைப்பு வசதிகளுக்காக இவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கட்டமைப்பு வசதிகளை பலப்படுத்தினால் மட்டுமே விவசாயம் வளர முடியும். 9 கோடியே 20 லட்சம்விவசாயிகளுக்கு, ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுவரும் நிலையில், விவசாயிகள் தங்களது சொந்த காலில்நிற்க வேண்டும் என்பதற்காகவே, விளைபொருட்கள் வணிகம் மற்றும்வர்த்தக சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இன்னும் 70 நாட்களில் ‘2ஜி ’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின் தீர்ப்பு வரவுள்ளது. அதன்மூலமாக, தமிழகத்தில் 2 மக்களவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.