தமிழகம்

கரோனா தொற்று அறிகுறிகள் இல்லாதவர்களுக்கும் நுரையீரலில் பாதிப்பு: இ.எஸ்.ஐ மருத்துவமனை டீன் தகவல்

செய்திப்பிரிவு

கரோனா தொற்று காரணமாக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வர்களில், அறிகுறிகள் இல்லாத வர்களுக்கும் நுரையீரல் பாதிப்புஇருந்தது சி.டி. ஸ்கேன் பரிசோதனையில் கண்டறியப்பட் டுள்ளதாக மருத்துவமனையின் டீன் ஏ.நிர்மலா தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: கரோனா தொற்று நுரையீரலை எந்த அளவு பாதித்துள்ளது என்பதைக் கண்டறிவதற்கு சி.டி. ஸ்கேன் பரிசோதனை உதவுகிறது. இதன்மூலம் தொற்றின் அளவை தெளிவாக தெரிந்துகொண்டு, அதற்கேற்ப நோயாளிகளை வகைப்படுத்தி சிகிச்சை அளித்துவருகிறோம். சி.டி. ஸ்கேன் இயந்திரம் உதவியுடன் 24 மணி நேரமும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இதன்மூலம், கோவை, திருப்பூர்,நீலகிரி மட்டுமின்றி பிற மாவட்டங்களில் இருந்து அனுமதிக்கப் பட்டவர்கள் என நேற்று வரை 5,641 சி.டி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதில், 1,739 பேருக்கு நுரையீரலில் எந்த பாதிப்பும் இல்லை. 1,525 பேருக்கு 10 சதவீதத்துக்கும் குறைவான பாதிப்பு இருந்தது. 1,084 பேருக்கு 10 முதல் 25 சதவீதம் பாதிப்பும், 843 பேருக்கு 25 முதல் 50 சதவீதம் பாதிப்பும், 329 பேருக்கு 50 முதல் 75 சதவீத பாதிப்பும் இருந்தது. 121 பேருக்கு 75 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு இருந்தது. இதில், 40 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு உள்ளவர்களுக்கு கடுமையான தொற்று என வகைப்படுத்தி அவர்களுக்கு தனிக் கவனம் செலுத்தப்பட்டுவருகிறது. தொற்றிலிருந்து நோயாளிகள் குணமாகும் வரை, அவர்களுக்கு 2 அல்லது 3 முறை சி.டி. ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப் படுகிறது. சிலருக்கு அறிகுறிகள் ஏதும் வெளியே தெரியாவிட்டாலும், நுரையீரலில் பாதிப்பு இருப்பது சி.டி. ஸ்கேன் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

நுண்கதிரியக்க துறையில் இதுவரை கர்ப்பிணிகளுக்கு 114 அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனையும், 978 பேருக்கு மார்பக எக்ஸ்-ரே பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT