உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணை ஆணையாளர் அலுவலகத்தில் இருந்து ரேஷன் கடைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில் கூறியிருப்பதாவது: ரேஷன் கடைகளில் கைரேகை பதிவுகளை வைத்து பொருட்கள் வழங்கும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்பட உள்ள நிலையில், அதற்கு ஏற்ப விற்பனை முனைய இயந்திரங்களில் சில மாற்றங்களுக்கான பதிவேற்றம் செய்யும் பணி வரும் செப்.25, 26 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.
எனவே, அனைத்து ரேஷன் கடைகளிலும் உள்ள மின்னணு விற்பனை முனைய இயந்திரங்களை, அதற்கு உரிய சார்ஜர்களுடன் இன்று (செப்.23) மாலை வட்ட உதவி ஆணையாளர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். அங்கு, பொறியாளர்களைக் கொண்டு அந்த விற்பனை முனைய இயந்திரங்களில் பதிவேற்றம் செய்வதுடன், சம்பந்தப்பட்ட ரேஷன் கடையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு பயிற்சியளிக்கப்படும். இதன் காரணமாக வரும் 25, 26 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகளில் பொருட்கள் விநியோகம் நடைபெறாது. அப்போது பொருட்களை பெற வேண்டியவர்கள் 28, 29 ஆகிய மாற்று தேதிகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.