தமிழகம்

விவசாயி என்பதில் பெருமைப்படுகிறேன்: முதல்வர் பழனிசாமி நெகிழ்ச்சி

செய்திப்பிரிவு

ராமநாதபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி ரூ.94 கோடியே 79 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், புதிய திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக முதல்வர் பழனிசாமி நேற்று காலை ராமநாதபுரம் வந்தார்.

அவருக்கு ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் முதல்வருக்கு பூங்கொத்து வழங்கி வரவேற்றார்.

அதைத் தொடர்ந்து ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ 70,54,88,000 மதிப்பில் 220 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.24,24,68,000 மதிப்பில் 844 புதிய திட்டப் பணிகள், அரசு கட்டிடங்களைத் திறந்து வைத்தார்.

லடாக் எல்லையில் வீர மரணம் அடைந்த ராமநாதபுரம் வீரர் பழனியின் மனைவி வானதி தேவிக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணிக்கான ஆணை உட்பட 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் நேரில் வழங்கினார். மொத்தம் 15,605 பேருக்கு ரூ.72,81,84,777 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இதைத் தொடர்ந்து முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக ஆட்சியில் எதையும் குறை கூற முடியாத எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை விவசாயி என்று கூறக் கூடாது என்கிறார். நான் இன்றும் விவசாயம் செய்து கொண்டிருக்கிறேன். அதனால் விவசாயி என்பதில் நான் பெருமைப்படுகிறேன். நான் விவசாயி என்பதால் தான் காவிரி-குண்டாறு இணைப்புத் திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளேன்.

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்குப் பயன் அளிக்கும் திட்டமாக உள்ளது. அதனால் நாங்கள் ஆதரித்தோம். அதே நேரம் விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை எதிர்ப்போம்.

டெல்டா மாவட்டத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் ஆகிய திட்டங்களுக்கு முனைப்பு காட்டியவர், அத்திட்ட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டவர் மு.க.ஸ்டாலின். இத்திட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து, காவிரி டெல்டா பகுதியை வேளாண் மண்டலமாக நாங்கள் அறிவித்துள்ளோம்.

எஸ்.ஆர்.பி.யிடம் விளக்கம்

புனித ஜார்ஜ் கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என மாநிலத் தலைவர் முருகன் கூறியுள்ளார். கோட்டையில் தற்போது அதிமுக கொடி பறக்கவில்லை, தேசியக் கொடி தான் பறக்கும். புதிய வேளாண் சட்டங்களுக்கு எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் எதிர்ப்பு தெரிவித்திருப்பது குறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

SCROLL FOR NEXT