சென்னை நங்கநல்லூர் பகுதியில் பாஜக நிர்வாகிகள் வரைந்த சுவர் விளம்பரத்தை அழித்த திமுக நிர்வாகிகளைக் கண்டித்து, தென் சென்னை பாஜக சார்பில் சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள். படம்: பு.க.பிரவீன் 
தமிழகம்

திமுகவை கண்டித்து சென்னையில் 7 இடங்களில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்

செய்திப்பிரிவு

திமுகவை கண்டித்து சென்னையில் 7 இடங்களில் பாஜக சார்பில்நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை நங்கநல்லூர் பகுதியில்பாஜகவினர் சுவர் விளம்பரம்செய்திருந்தனர். இந்த விளம்பரங்களை திமுகவினர் அழித்ததாகக் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து அப்பகுதி பாஜகவினர் ஒன்று திரண்டு, அழிக்கப்பட்ட இடத்தில் மீண்டும் சுவர் விளம்பரங்களை வரைந்தனர்.

இதனால் திமுக – பாஜக தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பாஜக மகளிரணியைச் சேர்ந்த இருவர் காயமடைந்தனர். அவர்களின் தங்க வளையல்கள் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்தும், பாஜகவினரை தாக்கிய திமுகவினரை கைது செய்ய வலியுறுத்தியும் நங்கநல்லூர், அம்பத்தூர், சைதாப்பேட்டை பனகல் மாளிகை, சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகம், அண்ணாநகர் வளைவு, தண்டையார்பேட்டை மணிக்கூண்டு, பெரவள்ளூர் ஆகிய 7 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நங்கநல்லுரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக மாநிலப் பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், "திமுகவினர் ஆட்சியில் இல்லாதபோதே வன்முறையில் இறங்கியுள்ளனர். காவல் துறையும் திமுகவுக்கு சாதகமாக நடந்து கொள்கிறது. பாஜகவினரை தாக்கிய திமுகவினரை கைது செய்யும் வரை போராட்டம் தொடரும்" என்றார்.

அம்பத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில ஊடகப் பிரிவுத் தலைவர் ஏ.என்.எஸ்.பிரசாத், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலச் செயலாளர் டால்பின் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT