தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில்கள் கடந்த செப். 1-ம் தேதி திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, பக்தர்கள் ஆன்லைனில் பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்யும் வசதியை ஏற்படுத்த இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது.
இதன்படி, வடபழனி முருகன், மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவேற்காடு தேவி கருமாரியம்மன், மாங்காடு காமாட்சி, திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி, மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர், ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில் உள்ளிட்ட 20 கோயில்களில் பக்தர்கள் இலவச மற்றும் கட்டண தரிசனத்துக்கு ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘பக்தர்களிடம் நிலவும் வரவேற்பை பொறுத்து கரோனா சூழல் சரியான பிறகு ஆன்லைனில் முன்பதிவு செய்யும் வசதியை மற்ற கோயில்களுக்கும் நீட்டிப்பது குறித்து முடிவு செய்யப்படும்’’ என தெரிவித்தார்.