கரோனா தடுப்புப் பணிகளை மேம்படுத்த ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுய மதிப்பீடு அடிப்படையில் ஏ, பி, சி என கிரேடு தந்து தரப்படுத்தி கணினிமயமாக்க புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் கரோனா தொற்றினால் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை 473 பேர் இறந்துள்ளனர். புதுச்சேரியில் 403 பேரும், காரைக்காலில் 31 பேரும், ஏனாமில் 39 பேரும் இறந்துள்ளனர். ஒரே தொகுதியான ஏனாமில் 39 பேர் அதிகபட்சமாக இறந்துள்ளனர்.
இச்சூழலில் கரோனா பணிகள் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி இன்று (செப். 22) பிறப்பித்துள்ள உத்தரவுகள் விவரம்:
"அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை ஐசிஎம்ஆரின் (இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்) அடையாள அளவீடுகளின் அடிப்படையில் தங்களை மதிப்பீடு செய்ய வேண்டும். வாரத்தில் புதன் மற்றும் சனிக்கிழமைகளில் சுய மதிப்பீட்டைத் தருவது அவசியம்.
கரோனா பணிகள் தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலையங்களை சுய மதிப்பீடு அடிப்படையில் அவர்களின் செயல்திறனுக்கு ஏ, பி மற்றும் சி கிரேடுகளை வழங்கி மறுவாழ்வுத்துறை ஆணையர் அன்பரசு தரப்படுத்துவார். இப்பதிவு கணினிமயமாக்கப்படும். தனிப்பட்ட கோப்புகளிலும் இடம்பெறும்.
இதன் மூலம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் கரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்கும் பணியில் மேம்படும்.
புதுச்சேரியில் நாள்தோறும் கரோனா இறப்பு தொடர்பாக விவரங்கள் பகுப்பாய்வு செய்யப்படும். இறப்புக்கான காரணங்கள் ஆராயப்படும். இதில், ஐசிஎம்ஆர் நிபுணரும் பங்கேற்பார்".
இவ்வாறு கிரண்பேடி தெரிவித்துள்ளார்.