காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
“வடக்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
தென் தமிழகம், மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, சிவகங்கை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், தென் தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் .
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸையும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸையும் ஒட்டி பதிவாகக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழை பெய்த விவரம்:
அவலாஞ்சி, பந்தலூர் (நீலகிரி) தலா 11 செ.மீ., சின்னக்கல்லாறு (கோவை), மைலாடி (கன்னியாகுமரி), ஹாரிசன் எஸ்டேட் (நீலகிரி) தலா 9 செ.மீ., வால்பாறை (கோவை) 8 செ.மீ., பெரியாறு (தேனி), சோலையாறு தலா 7 செ.மீ., வால்பாறை, பரம்பிக்குளம் (கோவை), மேல் பவானி (நீலகிரி) தலா 6 செ.மீ., நாகர்கோவில், தக்கலை, கொட்டாரம் (கன்னியாகுமரி) தலா 5 செ.மீ., குழித்துறை, இரணியல், கன்னிமார், சூரலாக்கோடு, பெருஞ்சாணி, சித்தாறு (கன்னியாகுமரி) தலா 4 செ.மீ.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
செப்டம்பர் 22 ஆம் தேதி அன்று கேரளா, கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். குமரிக்கடல் பகுதியில் சூறாவளிக் காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .
செப்டம்பர் 23 ஆம் தேதி அன்று மகாராஷ்டிரா, கோவா கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .
செப்டம்பர் 22, 23 ஆகிய தேதிகளில் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் .
மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
கடல் உயர்அலை முன்னறிவிப்பு :
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை செப். 23 இரவு 11:30 மணி வரை கடல் உயர் அலை 3.3 முதல் 3.7 மீட்டர் வரை எழும்பக்கூடும்”.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.