தமிழகம்

குமரியில் கனமழை; தாழக்குடியில் சாய்ந்த பழமையான ஆலமரம்: மழை நீரில் மூழ்கிய 300 ஹெக்டேர் நெற்பயிர்கள் 

எல்.மோகன்

கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு, பகலாகக் கொட்டிய கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மயிலாடியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது. தாழக்குடியில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ஆலமரம் சாய்ந்து விழுந்தது. மேலும் 300 ஹெக்டேர் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கின.

கன்னியாகுமரி மாவட்டத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, கடந்த இரு நாட்களாகக் கனமழையாக மாறியுள்ளது. நேற்று இரவு முழுவதும் பெய்த மழை இன்று பகலிலும் நீடித்தது. இதனால் பழையாறு, வள்ளியாறு, குற்றியாறு தாமிரபரணி ஆறு போன்றவற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மாவட்டம் முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவி வருகிறது. அதிகபட்சமாக மயிலாடியில் 9 செ.மீ. (90 மி.மீ.) மழை பெய்திருந்தது. நாகர்கோவிலில் 54 மி.மீ., கொட்டாரத்தில் 52, குழித்துறையில் 36, சிற்றாறு ஒன்றில் 38, கன்னிமாரில் 36, பேச்சிப்பாறையில் 32, பெருஞ்சாணியில் 40, சுருளோட்டில் 44, புத்தன் அணையில் 40, தக்கலையில் 48, இரணியலில் 36, மாம்பழத் துறையாறில் 42, கோழிப்போர்விளையில் 45, குருந்தன்கோட்டில் 40, முள்ளங்கினாவிளையில் 47, ஆனைகிடங்கில் 45 மி.மீ. மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 40 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. குமரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களில் பெய்த மழையில் இதுவே அதிகப் பதிவாகும்.

அன்றாட வாழ்க்கை பாதிப்பு

கனமழையால் திற்பரப்பு அருவியில் மழைநீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது. மாவட்டம் முழுவதும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மழையுடன் கடல் சீற்றமும் நிலவியதால் மீன்பிடிப்புப் பணி பாதிக்கப்பட்டது. மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மேலும் ரப்பர் பால் வெட்டும் தொழில், வேளாண் சார்ந்த தொழில், தேங்காய் வெட்டுதல் மற்றும் தென்னை சார்ந்த தொழில், உப்பளத் தொழில் என அனைத்துத் தரப்புத் தொழில்களும் முடங்கின.

கனமழையால் பேச்சிப்பாறை அணை 33 அடியாகவும், பெருஞ்சாணி அணை 69 அடியாகவும், முக்கடல் அணை 18 அடியாகவும் உயர்ந்துள்ளது. மாம்பழத்துறையாறு அணை முழுக் கொள்ளளவான 54 அடியை எட்டி மறுகால் பாய்கிறது. பேச்சிப்பாறை அணைக்கு உள்வரத்தாக 1,123 கன அடியும், பெருஞ்சாணி அணைக்கு 1,453 கன அடி தண்ணீரும் உள்வரத்தாக வந்து கொண்டிருக்கிறது.

ஆலமரம் முறிந்து விழுந்தது

மழையுடன் சூறைக் காற்றும் வீசியதால் தாழக்குடியில் பூதப்பாண்டி சாலையில், கரையடி சுடலைமாடசுவாமி கோயில் அருகே நூற்றாண்டைக் கடந்த பழமையான ஆலமரம் முறிந்து அங்கு நின்ற டெம்போ மீது விழுந்தது. அந்நேரத்தில் யாரும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ நெல் அறுவடை பணிகள் நடந்து வரும் நிலையில் ஏற்கெனவே 2 ஆயிரம் ஹெக்டேர் நெற்பயிர்கள் மழையால் அறுவடை செய்ய முடியாத நிலையில் உள்ளன.

இந்நிலையில் தோவாளை கரிசல்பத்து, இறச்சகுளம், பெரியகுளம் பகுதியில் மேலும் 300 ஹெக்டேர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. அறுவடைத் தறுவாயில் நெற்பயிர்கள் அழிந்து வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

SCROLL FOR NEXT