வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் லஞ்சம் பெறுவது உட்பட பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், அதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சிஐடியு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியது.
திருச்சி ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் இன்று (செப். 22) அச்சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் இந்தக் கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
மேலும், "எப்.சி. எடுக்க வரும் வாகனங்களுக்கு ஒளிரும் ஸ்டிக்கர் ஒட்டி கட்டணம் வசூலிக்கும் தனியார் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன எண்ணைக் குறித்து வைத்துக்கொண்டு அபராதம் விதிப்பதை காவல் துறையினர் கைவிட வேண்டும். வங்கிக் கடன் தவணையை ஓராண்டுக்கு ஒத்தி வைக்க வேண்டும். கடனுக்கான வட்டி, அபராத வட்டி ஆகியவற்றை ரத்து செய்ய வேண்டும்" ஆகிய கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்துக்கு சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் தலைமை வகித்தார்.
சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரங்கராஜன், சாலைப் போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வீரமுத்து, பொருளாளர் சுரேஷ் உட்பட பலர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.