திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று வந்த நிலையில், மின்சார ஒயர் துண்டிக்கப்பட்டதைத் தொடர்ந்து, மின் தடை ஏற்பட்டதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் இருவர் உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருப்பூர் பெருமாநல்லூர் சாலை முருகானந்தபுரத்தைச் சேர்ந்தவர் யசோதா (67). திருப்பூர் பெருமாநல்லூர் சாலை வெங்கடேஸ்புரத்தைச் சேர்ந்தவர் கெளரவன் (59). கடந்த 19-ம் தேதி யசோதாவும், 21-ம் தேதி கெளரவனும், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மருத்துவக் கல்லூரிக்கான கட்டிடப் பணிகள் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கரோனா தொற்றாளர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வார்டுக்குச் செல்லும் மின் ஒயர், கட்டிடப் பணியால் துண்டானதாகத் தெரிகிறது. இதனால், மின்சாரம் இன்றி, செயற்கை சுவாசம் அளிக்கப்படாமல் இன்று (செப். 22) ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் கரோனா நோயாளிகள் யசோதா, கௌரவன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது தொடர்பாக இருவரின் உறவினர்கள் கூறுகையில், "மருத்துவமனை வளாகத்தில் இன்று அதிகாலை முதல் மின்சாரம் இன்றி நோயாளிகள் அவதிப்பட்டு வந்தனர். அதிலும் குறிப்பாக செயற்கை சுவாசம் பயன்படுத்தும் கரோனா நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இதையடுத்து, இருவரும் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்தனர்" என்றனர்.
திருப்பூர் ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை ஆய்வு செய்து செய்தியாளர்களிடம் கூறுகையில், "திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தன. கரோனா வார்டுக்குச் செல்லக்கூடிய மின்சாரக் கம்பிகள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், சுமார் 40 நிமிடம் மின்சாரம் இல்லை.
மாற்று ஏற்பாடுகள் இருந்ததால் ஆக்ஸிஜன் தடைப்படவில்லை. மின்சாரம் இல்லாத நேரத்தில் அவர்கள் உயிரிழந்துள்ளனர். அவர்கள் உயிரிழக்க மின்சாரம் இல்லாதது காரணம் இல்லை. மருத்துவமனையில் தினமும் இரவு கரோனா நோயாளிகளுள் உடல் நிலை பாதிக்கப்பட்டவர்கள் குறித்து குறிப்பு எடுக்கப்படும். அதேபோல், இவர்கள் இருவரும் நேற்று இரவு உடல்நிலை சரியில்லாதவர்கள் எனக் குறிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு, மேலும் உடல் நிலை முடியாதவர்கள் நல்ல நிலையில் உள்ளனர். மேலும், இன்று காலை மின்சாரக் கம்பிகள் துண்டிக்கப்பட காரணமாக இருந்தவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது" என்றார்.