சிலைக் கடத்தல் வழக்குகளில் கைதாகி சிறையில் உள்ள அமெரிக்க வாழ் இந்தியரான சுபாஷ் சந்திர கபூர் ஜாமீன் கேட்டுத் தாக்கல் செய்துள்ள மனுவுக்கு, சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தைச் சேர்ந்த சுபாஷ் சந்திர கபூர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் 2008-ல் என் மீது சிலைக் கடத்தல் வழக்குப் பதிவு செய்தனர். நான் அமெரிக்கக் குடியுரிமை பெற்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவன். அமெரிக்காவில் ’ஆர்ட் ஆஃப் பாஸ்ட்’ என்ற தலைப்பில் சிலைக் கண்காட்சி நடத்தினேன். இதில் 20-க்கும் மேற்பட்ட கடத்தல் சிலைகள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டதாக தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜெர்மனிக்குச் சொந்த வேலைக்காகச் சென்றிருந்தபோது ரெட் கார்டன் நோட்டீஸ் அடிப்படையில் என்னை 2011-ல் ஜெர்மனி போலீஸார் கைது செய்து இந்திய போலீஸாரிடம் ஒப்படைத்தனர். என் மீதான சிலைக் கடத்தல் வழக்கில் 30 பேரிடம் போலீஸார் இதுவரை விசாரணை நடத்தியுள்ளனர். சிலைக் கடத்தல் தொடர்பாக என் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனக்கு 71 வயதாகிறது. புற்றுநோய்க்குச் சிகிச்சை பெற்று வருகிறேன். வழக்கில் கைது செய்யப்பட்ட 14 பேரில் என்னைத் தவிர மற்றவர்களுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. எனவே எனக்கு ஜாமீன் வழங்க உத்தரவிட வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதி பாரதிதாசன் விசாரித்தார். மனு தொடர்பாக தமிழ்நாடு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை செப். 29-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.