பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் புதிதாக 493 பேருக்குக் கரோனா தொற்று: மேலும் 6 பேர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 473 ஆக உயர்வு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 493 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 6 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23 ஆயிரத்து 684 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 473 ஆகவும் உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (செப். 22) கூறியதாவது:

"புதுச்சேரியில் 5,580 பேருக்குக் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் தற்போது புதுச்சேரியில் 407 பேர், காரைக்காலில் 53 பேர், ஏனாமில் 29 பேர், மாஹேவில் 4 பேர் என மொத்தம் 493 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார்: கோப்புப் படம்.

புதுச்சேரியில் 5 பேர், ஏனாமில் ஒருவர் என 6 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 2 சதவீதமாக உள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 23 ஆயிரத்து 684 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் புதுச்சேரியில் 2,491 பேர், காரைக்காலில் 362 பேர், ஏனாமில் 98 பேர், மாஹேவில் 12 என 2,963 பேர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், புதுச்சேரியில் 1,425 பேர், காரைக்காலில் 145 பேர், ஏனாமில் 196 பேர், மாஹேவில் 28 பேர் என மொத்தம் 1,794 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் புதுச்சேரி மாநிலத்தில் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உட்பட மொத்தமாக 4,757 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று மட்டும் புதுச்சேரியில் 265 பேர், காரைக்காலில் 80 பேர், ஏனாமில் 28 பேர், மாஹேவில் 16 பேர் என மொத்தம் 389 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 18 ஆயிரத்து 454 (77.92 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 901 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 1 லட்சத்து 15 ஆயிரத்து 426 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது".

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT