தமிழகம்

ஆட்டோ டிஜிட்டல் மீட்டர் விரைவில் கொள்முதல்: உயர் நீதிமன்றத்தில் அரசு உறுதி

செய்திப்பிரிவு

மெட்ராஸ் மெட்ரோ ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் ஐ.சேஷசயனம் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

சென்னையில் ஓடும் அனைத்து ஆட்டோக்களுக்கும் ரசீது வழங்கும் வசதி கொண்ட டிஜிட்டல் மீட்டர் மற்றும் ஜிபிஎஸ் கருவியை அரசு இலவசமாக பொருத்திக் கொடுப்பதற்காக ரூ.80.49 கோடி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும், இவை யாவும் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் பொருத்தப்படும் என்றும் அரசாணை வெளியிடப்பட்டது. ஆனால், இந்த கருவிகள் இதுவரை கொள்முதல் செய்யப்படவில்லை. இவற்றை விரைவாகப் பொருத்தினால், ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூலித்து செய்யப்படும் முறைகேடுகள் முற்றிலுமாகத் தடுக்கப்படும். எனவே, ஆட்டோக்களில் மேற்கண்ட கருவிகளை விரைவில் பொருத்த உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் கொண்ட முதல் அமர்வு முன்பு இவ்வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

சென்னையில் ஓடும் ஆட்டோக்களில் டிஜிட்டல் மீட்டர் மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்துவது தொடர்பான தொழில்நுட்ப அளவீடுகள் மற்றும் தரம் குறித்து முடிவு செய்வதற்காக பல்வேறு துறைகளைச் சேர்ந்த 13 பேர் கொண்ட குழு அமைத்து 24-9-2013 அன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கருவிகளை கொள்முதல் செய்யும் பொறுப்பு 26-6-2014 அன்று எல்காட் வசம் ஒப்படைக்கப்பட்டது. இக்கருவிகளைக் கொள்முதல் செய்வதற்காக 20-7-15 அன்று டெண்டர் கோரப்பட்டது. செப்டம்பர் 4-ம் தேதி டெண்டர் திறப்பதாக இருந்தது. இந்த டெண்டர் குறித்து நிறைய கோரிக்கைகள் வந்ததால், டெண்டர் திறப்பு வரும் அக்டோபர் 7-ம் தேதிக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அரசு பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட கருவிகளைக் கொள்முதல் செய்வதற்கான டெண்டர் இரண்டு மாதங்களில் இறுதி செய்யப்படும் என்றும் அதையடுத்து ஆறு மாதங்களில் கருவிகள் கொள்முதல் செய்யப்படும் என்றும் அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்ததாக கூடுதல் அரசு வழக்கறிஞர் கூறியுள்ளார். இந்த தகவல் பதிவு செய்யப்படுகிறது. கருவிகள் கொள்முதலுக்கு மேலும் கால அவகாசம் தேவைப்பட்டால், நீதிமன்றத்தை அரசு நாடலாம். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

SCROLL FOR NEXT