ராமநாதபுரம் மாவட்ட வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூடத்தில் முதல்வர் ரூ. 167.61 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், நலத்திட்டங்களை வழங்கியும், புதிய திட்டங்களை தொடங்கியும் வைத்தார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சிப்பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்திற்காக முதல்வர் கே.பழனிசாமி நேற்று (செப். 21) ராமநாதபுரத்திற்கு வருகை தந்தார். ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று (செப். 22) காலை 10.08 மணிக்கு வந்த முதல்வர், ரூ. 70 கோடியே 54 லட்சத்து 88 ஆயிரம் மதிப்பில் 220 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.24 கோடியே 24 லட்சத்து 68 ஆயிரம் மதிப்பில் 844 புதிய திட்டப்பணிகள், அரசு கட்டிடங்களை திறந்தும் வைத்தார்.
தொடர்ந்து, லடாக் எல்லையில் வீரமரணம் அடைந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த வீரர் பழனியின் மனைவி வானதி தேவிக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணி உள்ளிட்ட 11 பேருக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். இவ்விழா மூலம் 15 ஆயிரத்து 605 பயனாளிகளுக்கு ரூ.72 கோடியே 81 லட்சத்து 84 ஆயிரத்து 777 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் மொத்தம் ரூ.167.61 கோடி மதிப்பில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல், திட்டங்கள் திறந்து வைப்பு, பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
முன்னதாக ராமநாதபுரம் ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் முதல்வரை வரவேற்று பூங்கொத்து கொடுத்தார்.
நிகழ்ச்சியில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், செய்தி மற்றும் மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, கதர் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன், எம்எல்ஏக்கள் எம்.மணிகண்டன் (ராமநாதபுரம்), என்.சதன்பிரபாகர் (பரமக்குடி), ரெத்தினசபாபதி (அறந்தாங்கி), முன்னாள் எம்.பி. அ.அன்வர்ராஜா, அதிமுக மாவட்டச் செயலாளரும், ராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவருமான எம்.ஏ.முனியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, விழா மேடை முன்பு தென்மண்டல ஐஜி முருகன், ராமநாதபுரம் சரக டிஐஜி என்.எம்.மயில்வாகனன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து முதல்வரை வரவேற்றனர்.