திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம், சமயபுரம், மலைக்கோட்டை, பச்ச மலை உட்பட 13 இடங்களில் சுற்றுலாவை மேம்படுத்த திட்ட மிடப்பட்டுள்ளது. இங்கு மேற் கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சிப் பணிகள் குறித்து மத்திய அரசின் சுற்றுலா அமைச்சக சிறப்புக் குழுவினர் ஆய்வு செய்துள்ளனர்.
உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு கடந்த 5 ஆண்டுகளாக தேசிய அளவில் முதலிடம் வகித்து வருகிறது. இந்த பெருமையைத் தக்க வைத்துக்கொள்ளும் வகை யில், மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்துடன் இணைந்து, தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தவும், புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக் கவும் மாநில அரசு முனைப்பு காட்டி வருகிறது.
இங்கு பழங்கால கோயில்கள் மற்றும் பாரம்பரியச் சின்னங்கள் அதிகளவில் இருப்பதால், அவற் றைக்கொண்டு கலாச்சாரம் மற்றும் புராதனச் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுக் கழகம், தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி மேலாண்மை நிறுவனத்தின் கூட்டு முயற்சியுடன் தமிழ்நாடு அரசு இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
இத்திட்டத்தின்கீழ் சுற்றுலாத் துறையின் கீழ் உள்ள பகுதிகள் மட்டுமின்றி, வனத் துறை, பொதுப்பணித் துறை, இந்திய அரசின் தொல்லியல் துறை, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் தனியாரால் நிர்வகிக்கப்படும் புராதனச் சின்னங்கள், சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டுத் தலங்கள், பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய பகுதிகளும் அடை யாளம் காணப்பட்டு, அதுகுறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 295 இடங்களைக் கொண்டுள்ள இப்பட்டியலில், திருச்சி மாவட் டத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில், திருவானைக்காவல் ஜம்புகேஸ் வரர் கோயில், மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையார் கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், உறையூர் அழகிய மணவாள பெருமாள் கோயில்(நாச்சியார் கோயில்), உத்தமர் கோயில் (பிச்சாண்டார் கோயில்), திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோயில், திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயில், அன்பில் சவுந்தரராஜ பெருமாள் கோயில் (வடிவழகிய நம்பி பெருமாள் கோயில்), அக்கரைப்பட்டி சாய் பாபா கோயில், முக்கொம்பு, பச்சமலை, வெக்காளியம்மன் கோயில் ஆகிய 13 இடங்கள் இடம்பெற்றுள்ளன.
இதுதவிர, வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்காக தமிழ் நாடு ஓட்டல் உள்ளிட்ட 2 விடுதிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இவற்றில் மேற்கொள்ளப்பட வேண்டிய மேம்பாட்டுத் திட்டங் கள் குறித்து மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்தால் நியமிக் கப்பட்டுள்ள சிறப்புக் குழுவினர் அண்மையில் திருச்சியில் முகா மிட்டு, அனைத்து இடங்களுக்கும் சென்று ஒரு வாரம் ஆய்வு செய் துள்ளனர்.
இதுகுறித்து திருச்சி மாவட்ட சுற்றுலா அலுவலர் ஜெகதீஸ்வரி கூறும்போது, “தமிழ்நாட்டின் சுற்றுலா வளர்ச்சியில் திருச்சி மாவட்டத்துக்கு முக்கிய பங்குண்டு. கடந்தாண்டு இங்கு வந்து சென்ற சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியது. இந்த எண்ணிக் கையை மேலும் அதிகரிக்கவும், இங்குள்ள சுற்றுலாத் தலங்களை மேம்படுத்தவும் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் உத்தரவிட்டுள்ளார்.
அதனடிப்படையில், திருச்சி மாவட்டத்தில் தற்போது 13 இடங்கள் அடையாளம் காணப் பட்டு, அவற்றில் ஆய்வுப் பணி முடிந்துள்ளது.
ஒவ்வொரு இடத்திலும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தேவையான சாலை, நடைபாதை, கழிப்பறை, குடிநீர், வைப்பகம், கண் காணிப்பு கேமராக்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தருமாறு வேண்டுகோள் விடுக் கப்பட்டுள்ளது. இதற்கான பரிந் துரை அறிக்கையை மத்திய அரசின் சுற்றுலா அமைச்சகத்திடம் சிறப்புக் குழுவினர் அளிப்பார்கள். ஒப்புதல் கிடைத்ததும், இதற்கான பணிகள் நடைபெறும். இத்திட்டப் பணிகள் நிறைவுற்றால், திருச்சி மாவட்ட சுற்றுலாத் தலங்கள் மிகப்பெரிய அளவில் மேம்படும்” என்றார்.