தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி அளவுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.
கேரளா, கர்நாடகா மாநிலங்களில் உள்ள காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் கர்நாடகா மாநில அணைகளுக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
ஏற்கெனவே கடந்த மாதத்தில் பெய்த கனமழையின் போது கர்நாடக மாநிலத்தில் உள்ள அணைகள் முழுமையாக நிரம்பின. அப்போது, உபரிநீர் தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்டது. அதேபோல, தற்போதும் உபரி நீர் முழுமையாக தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டு வருகிறது.
கர்நாடக மாநிலத்தின் கபினி, கிருஷ்ணராஜசாகர் ஆகிய அணைகளுக்கு வரும் நீரின் அளவு சீராக அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தை நோக்கி காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் உபரி நீரின் அளவும் சீராக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இந்த உபரிநீர் நேற்று (செப். 21) காலை தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. அன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 19 ஆயிரம் கன அடி அளவுக்கு நீர்வரத்து அதிகரித்தது. பின்னர் அன்று மாலை விநாடிக்கு 42 ஆயிரம் கன அடி அளவுக்கு நீர்வரத்து உயர்ந்தது.
இந்நிலையில், இன்று (செப். 22) காலை நிலவரப்படி விநாடிக்கு 70 ஆயிரம் கன அடி அளவுக்கு நீர் வரத்து மேலும் அதிகரித்துள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது.
ஒகேனக்கல் அருவிகள், தொங்கும் பாலம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் நடைபாதை வெள்ளத்தில் முழுமையாக மூழ்கி உள்ளது. அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றோரங்களில் பொதுமக்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள், பரிசல் இயக்குபவர்கள் ஆகியோருக்கும் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்றோரம் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு தண்டோரா மூலம் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்ட காவிரிக் கரையோரப் பகுதி தொடர்ந்து வருவாய்த் துறை, வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அரசுத் துறை பணியாளர்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.