காஞ்சிபுரம் பட்டு நெசவுத் தொழிலில் 23 கூட்டுறவு சங்கங்கள் ஈடுபட்டுள்ளன. இந்தச் சங்கங்களில் சுமார் 15 ஆயிரம் நெசவாளர்கள் உறுப்பினராக உள்ளனர். இதேபோல் தனியார்களிடம் 15 ஆயிரம் நெசவாளர்கள் சேலை நெய்து தருகின்றனர்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் மாதம் ரூ.7.50 கோடி என ஆண்டுக்கு ரூ.90 கோடிக்கும், தனியாரிடம் ஆண்டுக்கு ரூ.400 கோடிக்கும் பட்டு விற்பனை நடைபெறும். கரோனா காரணமாக பெரிய அளவிலான திருமணங்கள் நடைபெறாதது, முழு அடைப்பு போன்ற காரணங்களால் 70 சதவீதம் விற்பனை சரிந்துள்ளது.
இதனால் சேலை உற்பத்தியும் கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது. மாதம் ரூ.8000 முதல் ரூ.10 ஆயிரம் வரை சராசரியாக கூலி பெற்று வந்தநெசவாளர்கள் தற்போது ரூ.2500 மட்டுமே பெறுகின்றனர். தனியார் நெசவாளர்கள் பலர் எந்த வருமானமும் இல்லாமல் உள்ளனர்.
வாரியத்தில் பதிவு செய்த 8,155 நெசவாளர்களுக்கு மட்டுமே ரூ.2000 உதவித் தொகையும், கூட்டுறவு நெசவாளர்கள் 2,765 பேருக்கு ரூ.1000 மதிப்புள்ள மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன. இதனால், பலர் காய்கறி வியாபாரம், கூலி வேலைக்கு செல்லும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். சில நெசவாளர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
இப்பாதிப்புகள் குறித்து சிஐடியு பட்டு மற்றும் பருத்தி கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.ஜீவா கூறும்போது, "கரோனா காலத்தில் நெசவாளர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலில் நெசவாளருக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரண நிதி வழங்க வேண்டும், நெசவுத் தொழிலில் ஈடுபடும் அனைத்து நெசவாளர்களுக்கும் இலவச மின்சாரம் வழங்க வேண்டும்" என்றார்.
கே.எஸ்.பி கைத்தறி சங்கத்தின்துணைச் செயலர் கே.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, "கோ-ஆப்டெக்ஸுக்கு நிதி ஒதுக்கி தேங்கியுள்ள பட்டுச் சேலைகளை கொள்முதல் செய்ய வேண்டும், வெளியூர் சேலைகளை காஞ்சிபுரம் பட்டுஎன்ற பெயரில் தனியார் விற்பதைத் தடுப்பதன் மூலம் நெசவாளர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தலாம்" என்றார்.
இதுகுறித்து கைத்தறி துணை இயக்குநர் அலுவலகத்தில் கேட்டபோது, "நெசவாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். கூட்டுறவு சங்கத்தின்கீழ் பணி செய்யும் பட்டு நெசவாளர்களில் 4,962 பேர் மட்டுமே தொடர்ச்சியாக சேலைகளை நெசவு செய்கின்றனர். நெசவாளர்கள் 2,150 பேருக்கு முழு ஊரடங்கு காலத்தில் ரூ.43 லட்சம் கூலியாக வழங்கியுள்ளோம். இதன்பிறகு 2,040 நெசவாளர்களுக்கு கூலியாகரூ.67.85 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. நலவாரியத்தில் பதிவு செய்தவர்கள் தவிர்த்து விலையில்லா மின்சாரம் பெறும் 6,342 நெசவாளர்களுக்கு ரூ.2000 உதவித் தொகை வழங்கியுள்ளோம். கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.2,000 முன்பணம் வழங்கியுள்ளோம். நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1 கோடியே 74லட்சமும், மானியமாக ரூ.1 கோடியே 41 லட்சமும் வழங்கப்பட்டுள்ளது" என்றனர்.
கூட்டுறவு சங்கத்தின் கீழ் பணி செய்யும் நெசவாளர்களுக்கு நேரடிஉதவிகள் போதிய அளவில் வழங்கப்பட வேண்டும் என்றும், முற்றிலும் கைவிடப்பட்டுள்ள பெரும்பாலான தனியார் நெசவாளர்களுக்கும் உதவ அரசு முன்வர வேண்டும் என்றும் நெசவாளர் அமைப்புகள் வலியுறுத்துகின்றன.