“திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணு பிரியா தற்கொலை குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு ஏற்க தயாராகவே இருக்கும்” என்று மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழகத்தில் அதிமுகவை தவிர்த்து மற்ற கட்சிகளிடம் ஒற்றுமை இல்லாமல் பிரிந்துள்ளன. வலுவான எதிர்கட்சி இல்லாத காரணத்தால், 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவே வெற்றி பெற்று மீண்டும் தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கும்.
சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா 110 விதிகளின் கீழ் அறிவிக்க கூடிய எந்த திட்டப்பணிகளும் மக்களை சென்றடையவில்லை என்று கூறுவது தவறான குற்றச்சாட்டு. சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி திட்டங்களை எப்படி நடை முறைப்படுத்துவது என்பது குறித்து தினந்தோறும் கோட்டையில் முதல்வர் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இலங்கை தமிழர்களை கொன்று குவித்து மனித உரிமை மீறலில் ஈடுபட்ட ராஜபக்சே மீது சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவருக்கு தூக்கு தண்டனை பெற்று தர ஐ.நா.சபை முன்வர வேண்டும்.
திருச்செங்கோடு டிஎஸ்பி. விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கை சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க தமிழக அரசு தயாராகவே இருக்கும். ஏனெனில் இந்த வழக்கில் விஷ்ணுபிரியாவுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதையே அரசு விரும்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.