அதிமுகவில் பொதுச் செயலாளர் பதவி 4 ஆண்டுகளாக காலியாக உள்ளது. அதிமுகவில் தற்போதுள்ள நிலை குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க உத்தரவிட வேண்டும் என அதிமுக தொண்டர் ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
எம்ஜிஆர் மறைவுக்குப் பின் அதிமுக 1988-ல் இரண்டாகப் பிளவுபட்டது. 89 தேர்தல் தோல்விக்குப் பின் மீண்டும் ஒன்றுபட்ட அதிமுகவாக ஜெயலலிதாவின் தலைமையின் கீழ் வந்தது. அதன்பின்னர் பொதுச் செயலாளரான ஜெயலலிதா அவர் மறையும் வரை நீடித்தார். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின் சசிகலாவைப் பொதுச்செயலாளராகப் பொதுக்குழு தேர்வு செய்தது.
பின்னர் அவர் சிறை சென்றார். அவரைக் கட்சியிலிருந்து நீக்கிய ஓபிஎஸ்-இபிஎஸ் தரப்பினர் தங்களை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என அறிவித்தனர். புதிய பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் வரை இந்தப் பொறுப்பில் நீடிப்பதாக அவர்கள் அறிவித்தனர். மறுபுறம் சசிகலாவைப் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கியது செல்லாது என்கிற வழக்கும் தேர்தல் ஆணையம் முன் உள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த சூர்யமூர்த்தி என்கிற வழக்கறிஞரும், அதிமுக தொண்டருமான ஒருவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.
அவரது மனுவில், ''நான் அதிமுக தொண்டனாக இருக்கிறேன். 2008 முதல் அடிப்படைத் தொண்டனாக இருக்கிறேன். அப்போதைய பொதுச் செயலாளர் எனக்கு உறுப்பினர் அங்கீகாரம் அளித்தார்.
அதிமுகவில் பொதுச் செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில், ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் தேர்தல் இன்றி வந்துள்ளனர். இருவரும் கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்குத் தடை விதிக்க வேண்டும்.
கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுச் செயலாளர் பதவி உட்பட எந்த நிர்வாகிகளுக்கான தேர்தலும் நடத்தப்படவில்லை. தேர்தல் நடத்தாமல் கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற சிக்கலும் ஏற்பட்டுள்ளது. இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையை ஏற்காமல் கே.சி.பழனிசாமி, நயினார் நாகேந்திரன், செந்தில் பாலாஜி, வெற்றிவேல், தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோர் கட்சியிலிருந்து வெளியேறியுள்ளனர்.
அனைவரையும் கவரக்கூடிய ஒற்றைத் தலைமை இல்லாததால் கட்சியினரும், பொதுமக்களும் குழப்பத்தில் உள்ளனர். அதிமுக செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என சூர்யமூர்த்தி கோரியுள்ளார்.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் எனத் தெரிகிறது.