தட்டார்மடத்தில் கடத்திக் கொலை செய்யப்பட்ட வியாபாரியின் சகோதரர்களுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
சாத்தான்குளம் கொம்மடிக்கோட்டையைச் சேர்ந்தவர் தண்ணீர் கேன் வியாாரி செல்வன். இவரது சகோதரர்கள் பங்கார்ராஜன், பீட்டர்ராஜ். இவர்கள் மீது விவசாய நிலத்தைச் சேதப்படுத்தியதாக அதிமுக நிர்வாகி திருமணவேல் அளித்த புகாரின் பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் முன்ஜாமீன் கேட்டு செல்வன், பங்கார்ராஜன், பீட்டர்ராஜ் ஆகிய மூவரும் உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
''எங்களுக்குச் சொந்தமான நிலத்தை திருமணவேல் ஆக்கிரமித்தது தொடர்பாக சாத்தான்குளம் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த முன்விரோதம் காரணமாக திருமணவேல் எங்களுக்கு எதிராக போலீஸில் புகார் அளித்தார். திருமணவேலுக்கு ஆதரவாக தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் செயல்பட்டு வருகிறார்.
பங்கார்ராஜனை தட்டார்மடம் காவல் ஆய்வார் ஹரிகிருஷ்ணன், சட்டவிரோதமாக அடைத்து வைத்துத் தாக்கினார். இது தொடர்பாக மனித உரிமை ஆணையம் விசாரித்து வருகிறது. இதனால் ஹரிகிருஷ்ணன் எங்களுக்கு எதிராகச் செயல்பட்டு வருகிறார்.
நாங்கள் கைது செய்யப்பட்டால் போலீஸாரால் கடுமையாகத் தாக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, முன்ஜாமீன் வழங்க வேண்டும்''.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், செல்வன் கடத்திக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது கொலை வழக்கை சிபிசிஐடி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் முன்ஜாமீன் மனு, நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. பின்னர் இருவருக்கும் நிபந்தனையற்ற முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்