தமிழகம்

குமரியில் நீடிக்கும் கனமழை; மழைநீரில் சிக்கிய நெற்பயிர்களை அறுவடை செய்யமுடியாமல் விவசாயிகள் தவிப்பு

எல்.மோகன்

கன்னியாகுமரியில் கனமழை நீடித்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு விநாடிக்கு 2265 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. கன்னிப்பூ அறுவடையின்போது மழை நீரில் சிக்கிய நெற்பயிர்களைக் கரை சேர்க்க முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. இடையில் சில நாட்கள் மட்டும் மழை நின்று வெயில் அடித்த நிலையில், மீண்டும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நேற்று இரவில் இருந்து கொட்டிய கனமழை இன்று பகலிலும் பரவலாகப் பெய்தது.

கனமழையால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வரும் நேரத்தில், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதியான பாலமோரில் 46 மி.மீ. மழை பெய்துள்ளது.

சிவலோகத்தில் (சிற்றாறு 2) 40 மிமீ., கெட்டாரத்தில் 37, சிற்றாறு ஒன்றில் 28, பூதப்பாண்டியில் 15, கன்னிமாரில் 16, பேச்சிப்பாறையில் 26, குளச்சலில் 12, இரணியலில் 22, அடையாமடையில் 15 மி.மீ. மழை பெய்திருந்தது. பாலமோரில் பெய்து வரும் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளுக்கும் விநாடிக்கு 2265 கனஅடி தண்ணீர் உள்வரத்தாக வருகிறது. பேச்சிப்பாறை அணைக்கு 1271 கனஅடி, பெருஞ்சாணி அணைக்கு 994 கனஅடி தண்ணீர் வருகிறது. பேச்சிப்பாறை அணையில் 32 அடி தண்ணீர் உள்ள நிலையில் 530 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.

பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 68 அடியாக உயர்ந்தது. நாகர்கோவில் நகருக்குக் குடிநீர் வழங்கும் முக்கடல் அணை நீர்மட்டம் 17 அடியைத் தாண்டியுள்ளது.

மாவட்டம் முழுவதும் நீடித்து வரும் கனமழையால் கன்னிப்பூ நெல் அறுவடைப் பணி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இறச்சகுளம், திருப்பதிசாரம், பூதப்பாண்டி, பெரியகுளம், நெல்லிகுளம் உள்ளிட்ட 2 ஆயிரம் ஹெக்டேருக்கு மேற்பட்ட வயல் பரப்புகளில் விளைந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன. இவற்றை அறுவடை செய்து கரைசேர்க்க முடியாமல் விவசாயிகள் பரிதவித்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT