சென்னையில் பிறந்து ஒரு நிமிடமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை பெயரில் `பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டத்தின்’ கீழ் சேமிப்புக் கணக்குத் தொடங்கப்பட்டது.
இந்திய அஞ்சல் துறை சார்பில், ஆண் குழந்தைகளுக்காக `பொன்மகன் பொதுவைப்பு நிதி’ என்ற புதிய சேமிப்புத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் இத்திட்டம் கடந்த 4-ம் தேதி தொடங்கப்பட்டது. இந்நிலையில், கார்த்திகேயன்-அனிதா தம்பதியினருக்கு நேற்றுமுன்தினம் பிற்பகல் 3.45 மணிக்கு குன்றத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.
உடனே, ஒரு நிமிடத்தில் அதாவது 3.46 மணிக்கு தனது மகனின் பெயரில் பொன்மகன் பொதுவைப்பு நிதி திட்டத்தின் கீழ் புதிய சேமிப்புக் கணக்கை தந்தை கார்த்திகேயன் தொடங்கினார். குழந்தைக்கு தமிழ்ச் செல்வன் என பெயர் சூட்டினார்.
வானகரத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஆபரேட்டராக பணிபுரிந்து வரும் கார்த்திகேயன் பொன்மகன் சேமிப்புத் திட்டம் குறித்து தகவல் தெரிந்ததும், தனது மகனின் வளமான எதிர்காலத்துக்காக பிறந்த உடனே இத்திட்டத்தின் கீழ் சேமிப்புக் கணக்கைத் தொடங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, இச்சேமிப்புத் திட்டத்துக்கு பொதுமக்களிடையே கிடைத்து வரும் வரவேற்பையடுத்து சென்னை அஞ்சல் வடகோட்டத்தின் கீழ் இயங்கும் அயனாவரம், அண்ணா நகர் மற்றும் ஐசிஎப் அஞ்சலகங் களில் இத்திட்டம் விரிவுபடுத்தப் பட்டுள்ளது. விரைவில் பார்க் டவுன், வண்ணாரப்பேட்டை, ராயப்பேட்டை, கீழ்ப்பாக்கம் மற்றும் அரும்பாக்கம் அஞ்சல் நிலையங்களிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது.