மேட்டூர் அணை: கோப்புப்படம் 
தமிழகம்

கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பு: மேட்டூர் காவிரிக் கரையோரக் கிராமங்களில் பரிசல் போக்குவரத்துக்குத் தடை

எஸ்.விஜயகுமார்

கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வருவதை முன்னிட்டு மேட்டூர் காவிரிக் கரையோரக் கிராமங்களில் பரிசல் போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக, கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி அங்கிருந்து உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. காவிரியில் விநாடிக்கு 50 ஆயிரம் கன அடிக்கு மேல் வெள்ளம் திறக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் மேட்டூர் காவிரிக் கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேட்டூர் நீர்த்தேக்கத்தை ஒட்டிய கிராமங்களான பண்ணவாடி கோட்டையூர் உள்பட காவிரிக் கரையோர கிராமங்களில் மக்கள் பரிசல் போக்குவரத்தில் ஈடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெள்ளம் பெருக்கெடுத்து வரும் என்பதால் காவிரியில் மீன் பிடிப்பதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, வருவாய்த் துறை மூலம் மேட்டூர் காவிரி கரையோரக் கிராமங்களில் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, நேற்று (செப். 20) அணையின் நீர்மட்டம் 92.26 அடியாக இருந்தது. இது இன்று (செப். 21) 89.77 அடியாக குறைந்துவிட்டது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 18 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 800 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று 11 ஆயிரத்து 241 கன அடியாக இருந்த அணைக்கான நீர்வரத்து, இன்று காலையில் விநாடிக்கு 12 ஆயிரத்து 450 கன அடியாக அதிகரித்து இருக்கிறது. அணையின் நீர் இருப்பு நேற்று 90.26 டிஎம்சி-யாக உள்ளது. இன்று 89.77 டிஎம்சி-யாக உள்ளது.

SCROLL FOR NEXT