அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம் 
தமிழகம்

புதுவையில் கரோனாவுக்கு 9 பேர் உயிரிழப்பு; இறந்தோர் எண்ணிக்கை 467 ஆக உயர்வு: அதிக பரிசோதனையில் புதுச்சேரி முதலிடம்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரியில் கரோனாவுக்கு இன்று மேலும் 9 பேர் இறந்ததையடுத்து இதுவரை பலியானோர் எண்ணிக்கை 467 ஆக உயர்ந்துள்ளது. அதேநேரத்தில், மொத்த மக்கள்தொகையில் பத்து சதவீதத்துக்கு மேல் பரிசோதனை செய்த முதல் சிறிய மாநிலம் புதுச்சேரிதான் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் இன்று (செப். 21) ஒரே நாளில் புதுவையில் 411, காரைக்காலில் 53, ஏனாமில் 45 பேர் என மொத்தம் 509 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பினர்.

புதுவை மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 23 ஆயிரத்து 191 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,667 பேர் தொற்றுடன் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். 18 ஆயிரத்து 65 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். புதுவையில் 2,470, காரைக்காலில் 412, ஏனாமில் 98, மாஹேவில் 12 பேர் என 2,992 பேர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

புதுவை கதிர்காமம், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சை பலனின்றி 6 பேர், காரைக்காலில் ஒருவர், ஏனாமில் 2 பேர் பலியாகியுள்ளனர். 9 பேர் இறந்ததையடுத்து புதுவையில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கை இன்று 467 ஆக உயர்ந்துள்ளது.

சுகாதாரத்துறையினர், இதுபற்றிக் கூறுகையில், "இறுதிக்கட்டத்தில் சிகிச்சைக்கு வருவதால்தான் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. தற்போது வீடு வீடாகச் சென்று பரிசோதிக்கத் தொடங்கியுள்ளோம்" என்கின்றனர்.

சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் கூறுகையில், "அதிக அளவு பரிசோதனை செய்த சிறிய மாநிலம் புதுச்சேரிதான். மொத்த மக்கள்தொகையில் பத்து சதவீதம் பேருக்குக் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்துள்ளோம். தற்போது 1.4 லட்சம் பேரைத் தாண்டி எடுத்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT