தூத்துக்குடி செல்வன் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த அதிமுக பிரமுகர் உள்பட 2 பேர் சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் இன்று சரணடைந்த நிலையில், வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே சொக்கன் குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வன். தண்ணீர் கேன் வியாபாரியான இவர் கடந்த 17-ம் தேதி காரில் கடத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து திசையன்விளை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தட்டார்மடம் அருகே உசரத்துக் குடியிருப்பைச் சேர்ந்த அதிமுக தெற்கு மாவட்ட வர்த்தகர் அணித் தலைவரான திருமணவேலுக்கும், செல்வனுக்கும் இடையே சொத்துப் பிரச்சினை இருந்தது தெரியவந்தது.
தனிப்பட்ட பகை காரணமாக செல்வன் கடத்திக் கொலை செய்யப்பட்டது விசாரணையில் தெரியவந்தது. திருமணவேலின் தூண்டுதலின்பேரில், செல்வன் மற்றும் அவரது சகோதரர்கள் மீது தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் பொய்ப் புகாரில் வழக்குப் பதிவு செய்து துன்புறுத்தியதும் செல்வனின் தாயார் எலிசபெத் அளித்த புகாரில் தெரியவந்தது.
இதையடுத்து தட்டார்மடம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், திருமணவேல் உள்ளிட்டவர்கள் மீது கொலை உள்ளிட்ட பிரிவுகளில் 4 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
இது தொடர்பாக இதுவரை 3 பேரைக் கைது செய்த போலீஸார், தலைமறைவான திருமணவேல் உள்ளிட்டவர்களைத் தேடி வந்தனர். இந்த நிலையில் அதிமுக பிரமுகர் திருமணவேல், மற்றொரு முக்கியக் குற்றவாளி முத்துக்கிருஷ்ணன் ஆகிய இருவரும் சைதாப்பேட்டை 23-வது நீதிமன்ற நடுவர் கவுதம் முன்பு இன்று சரணடைந்தனர்.
கைதான அதிமுக பிரமுகர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். உரிய நடவடிக்கை எடுத்தால்தான் உடலை வாங்குவோம் என செல்வனின் உறவினர்கள் கூறிவந்த நிலையில், ஹரிகிருஷ்ணனைப் பணியிடை நீக்கம் செய்து நெல்லை சரக டிஐஜி உத்தரவிட்டார்.
இந்நிலையில் செல்வன் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது. வழக்கு விசாரணையை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி சாத்தான்குளம் போலீஸாரின் அத்துமீறலைத் தொடர்ந்து, எஸ்.ஐ. இசக்கிராஜா, பின்னர் தட்டார்மடம் போலீஸாரின் அத்துமீறல் என தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையின் செயல்பாடுகளில் சீரமைப்பு தேவை என்பது அவசியமாகி வருகிறது.