தமிழகம்

இணையத்தில் தோல்பாவைக் கூத்து; வசூலான தொகையில் வில்லிசைக் கலைஞர்களுக்கு உதவி

என்.சுவாமிநாதன்

தோல்பாவைக் கூத்துக் கலைஞர் முத்துச்சந்திரன், தனது குழுவினரோடு சேர்ந்து நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் கிடைத்த வருமானத்தில் வில்லிசைக் கலைஞர்களுக்கு உதவியிருக்கிறார்.

கரோனா கிராமியக் கலைஞர்களையும் வெகுவாகப் பாதித்திருக்கிறது. தென் மாவட்டக் கோயில் கொடைவிழாக்களில் வில்லுப்பாட்டு மிகவும் பிரபலமானது. கரோனாவால் கோயில் கொடை விழாக்களும் ரத்தானதால் வில்லிசைக் கலைஞர் தங்கமணி மிகவும் கஷ்ட சூழலுக்குள் தள்ளப்பட்டார். வயோதிகப் பெற்றோரைக் காப்பாற்றும் நோக்கத்தில் தங்கமணி சாலையோரம் மரவள்ளிக் கிழங்கு விற்று வந்தார்.

இதுகுறித்து 'இந்து தமிழ்' இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் தங்கமணிக்கு உதவும் முயற்சியைக் கையில் எடுத்தார் நாட்டார் வழக்காற்றியல் ஆய்வாளர் அ.கா.பெருமாள். அதன் விளைவாக கிராமியக்கலைஞர்கள் தங்களுக்குள் நேசக்கரம் நீட்டத் தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து அ.கா.பெருமாள் 'இந்து தமிழ்' இணையதளத்திடம் கூறுகையில், ''வில்லிசைக் கலைஞர் தங்கமணி வாழ்வாதாரம் இழந்து மரவள்ளிக் கிழங்கு விற்பதைப்போல் பல கலைஞர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என முடிவெடுத்தேன். புதுச்சேரியில் தாமரைச்செல்வி என்னும் பெண்மணி, கிராமியக் கலைஞர்களுக்கு உதவும் அமைப்பு ஒன்றை வைத்திருக்கிறார். அவரிடம் பேசி, குமரி மாவட்டம் தோவாளை அருகே உள்ள திருமலாபுரத்தைச் சேர்ந்த முத்துச்சந்திரன் என்னும் தோல்பாவை கூத்துக் கலைஞருக்கு ஒரு நிகழ்ச்சி கேட்டேன். இணையவழியில் இதைப் பார்வையாளர்கள் கண்டு மகிழ வசதி செய்யப்பட்டது. தோல்பாவை கூத்துக் கலைஞர் முத்துச்சந்திரனுக்கும், அவரது குழுவுக்குமாகச் சேர்த்து 10 ஆயிரம் ரூபாய் சம்பளம் பேசப்பட்டது.

இணைய வழியில் தோல்பாவைக் கூத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் 50 ரூபாய் கட்டணம் நிர்ணயித்தோம். இந்தத் தகவல் எழுத்தாளர் ஜெயமோகனுக்கும் தெரிந்து, அவரது இணையப் பக்கத்தில் இதுகுறித்து எழுதினார். இதனைத் தொடர்ந்து அந்த நிகழ்ச்சியில் திரளான பார்வையாளர்களும், நல்ல எண்ணத்தோடு உதவுபவர்களும் இணைந்தனர்.

தோல்பாவைக் கூத்து நிகழ்ச்சிக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்து, கலைஞர்களின் வாழ்வாதாரத்தைக் காக்கத்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தோம். ஆனால், நிகழ்ச்சி மூலம் 62 ஆயிரம் ரூபாய் கிடைத்தது. இதில் முத்துச்சந்திரனுக்கு 10 ஆயிரம் ரூபாய் கொடுத்தது போக, 40 ஆயிரம் ரூபாய்க்கு அவரது கிராமத்தில் இருக்கும் மக்களுக்கு இட்லிக் குட்டுவம், தையல் மிஷின், டீக்கடை போடத் தேவையான தளவாடங்கள் எனப் புதிய தொழில் தொடங்கி, முன்னேறத் தேவையானதை வாங்கிக் கொடுத்தோம்.

மீதம் இருந்த 12 ஆயிரம் ரூபாய்க்கு, வில்லிசைக் கலைஞர் தங்கமணி ஊர், ஊராய்ப் போய் மரவள்ளிக் கிழங்கு வியாபாரம் செய்யும் வகையில் மூன்று சக்கர வாகனம் செய்து கொடுத்தோம். அதுவரை ஒரே இடத்தில் இருந்து வியாபாரம் செய்த தங்கமணி இப்போது இடம்பெயர்ந்து விற்பனை செய்கிறார். இந்த வாகனத்தை தோல்பாவைக் கூத்துக் கலைஞர் முத்துச்சந்திரனே அவரிடம் ஒப்படைத்தார்.

நாகர்கோவிலைச் சேர்ந்த சாகுல் ஹமீது கலைஞர்களுக்கு உதவும் வகையில் பெரிய பங்களிப்பு செய்தார். தொடர்ந்து இதேபோல் நலிவுற்ற கலைஞர்களுக்கு உதவும் வகையில் இணைய வழியில் கலை நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டு வருகிறோம்'' என்றார்.

SCROLL FOR NEXT