தமிழகம்

வேளாண் சட்டத்தை எதிர்த்து செப்.28-ல்  மாநிலந்தழுவிய போராட்டம்: திமுக  தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு 

செய்திப்பிரிவு

வேளாண் சட்டத்தை எதிர்த்து தமிழகம் முழுவதும் செப்.28-ல் ஆர்பாட்டம் நடத்த திமுக தலைமையிலான தோழமைக்கட்சிகள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

புதிய வேளாண் சட்டத்தை மத்திய அரசு நேற்று நிறைவேற்றியது. பல மாநிலங்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையில் தமிழக அரசு அதை ஆதரித்தது. இந்நிலையில் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய இன்று (21/9) தோழமைக்கட்சிகளுடனான கூட்டத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்.

இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் தோழமைக்கட்சிகளின் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, இடது சாரிக்கட்சித்தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், விசிக தலைவர் திருமாவளவன், மமக கட்சித்தலைவர் ஜவாஹிருல்லா, கொமக தலைவர் ஈஸ்வரன், முஸ்லீம் லீக், தி.க தலைவர்கள் மற்றும் திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன், துணைப்பொதுச் செயலாளர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.

இதில் மத்திய அரசு கொண்டு வந்த புதிய வேளாண் சட்டத்தை கண்டித்தும், மாநில அரசு அதை ஆதரிப்பதை கண்டித்தும், சட்டத்தை திரும்பப்பெறவும் வலியுறுத்தப்பட்டது. புதிய வேளாண்சட்டத்தை எதிர்த்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் திமுக உள்ளிட்ட தோழமைக்கட்சிகள் சார்பாக மாநில, மாவட்ட, நகர, ஒன்றியங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது.

கூட்டத்திற்குப்பின் வெளியில் வந்த தலைவர்கள் செப். 28 அன்று மாநிலந்தழுவிய போராட்டம் செப்.28 அன்று நடக்கும் என தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT