தொடர் மழையால் நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோவையில் உள்ள பல குளங்கள் நிரம்பியுள்ளன.
கோவை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சிறுவாணி, வெள்ளியங்கிரி மலைப் பகுதிகளில் பெய்த மழையால் நொய்யல் ஆற்றில் நேற்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், சிறுவாணி அணை மற்றும் நொய்யலைச் சார்ந்துள்ள நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. கனமழை காரணமாக கோவை குற்றாலம் அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து பொதுப்பணித் துறையினர் கூறும்போது, ‘‘கடந்த ஆகஸ்ட் மாதம் மழை பெய்தபோது ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குளங்களுக்கு தொடர்ந்து நீர்வரத்து இருந்தது. இந்நிலையில், மீண்டும் கனமழை பெய்ததால் நேற்று முன்தினம் இரவு பெருக்கெடுத்த வெள்ளம் சித்திரைச்சாவடி தடுப்பணையைக் கடந்து சென்றது. சித்திரைச்சாவடி தடுப்பணையிலிருந்து பிரிந்து செல்லும் வாய்க்கால் மூலம் 9 குளங்கள் பயன்பெறுகின்றன.
அவற்றில், புதுக்குளம், கொளராம்பதி, நரசாம்பதி குளங்கள் முழு கொள்ளளவை எட்டிவிட்டன. கிருஷ்ணாம்பதி, செல்வாம்பதி குளங்களுக்கு தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. மற்றொருபுறம், மாதம்பட்டி அருகேயுள்ள தடுப்பணையிலிருந்து குனியமுத்தூர் வாய்க்கால் மூலம் பயன்பெறும் கங்கநாராயணசமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, பேரூர் பெரியகுளம், செங்குளம் ஆகிய குளங்கள் நிரம்பிவிட்டன. குறிச்சி குளத்தில் 95 சதவீதம் தண்ணீர் உள்ளது. இதுதவிர, சேத்துமா வாய்க்கால் வழியாகச் சென்ற தண்ணீரால் உக்கடம் பெரிய குளம் 85 சதவீதம் நிரம்பியுள்ளது. செல்வசிந்தாமணி குளத்தில் 30 சதவீத அளவுக்கு தண்ணீர் உள்ளது. சிங்காநல்லூர் குளம் நிரம்பும் நிலையில் உள்ளது’’ என்றனர்.
487 மி.மீ. மழை பதிவு
கோவை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): சின்கோனா 104, சோலையாறு 82, சின்னகல்லாறு 80, வால்பாறை பிஏபி 75, வால்பாறை வட்டாட்சியர் அலுவலகம் 74, பொள்ளாச்சி 30.2, வேளாண் பல்கலைக்கழம் 13.5. மாவட்டம் முழுவதும் மொத்தம் 487 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 44.61 அடியாக உள்ளது.
மேற்குத் தொடர்ச்சி மலையில் பரவலாக மழை பெய்து வருவதால், பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் நேற்று முன்தினம் மாலை 71.39 அடியாக உயர்ந்தது. அணைக்கு விநாடிக்கு 2,700 கனஅடி நீர்வரத்து உள்ளது. பாதுகாப்பு கருதி இரண்டு மதகுகள் வழியாக விநாடிக்கு 2657 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
குரங்கு அருவியில் வெள்ளம்
வால்பாறையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் குரங்கு அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான சக்தி எஸ்டேட், தலநார் எஸ்டேட் பகுதியில் உள்ள நீரோடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து குரங்கு அருவியிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வனத் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.