தமிழகம்

வேளாண் மசோதாக்களை கண்டித்து 144 தடை உத்தரவையும் மீறி தொடர் போராட்டம்: இரா.முத்தரசன் அறிவிப்பு

செய்திப்பிரிவு

வேளாண் மசோதாக்களை கண்டித்து, 144 தடை உத்தரவையும் மீறி தொடர் போராட்டம் நடத்தப்படும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

நாகையில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கொண்டுவந்துள்ள விவசாயிகளுக்கு எதிரான வேளாண் துறை தொடர்பான 3 மசோதாக்களால் விவசாயிகளுக்கு நிறைய பயன் உண்டு என பிரதமர் மோடி பொய் சொல்கிறார். அதேபோல, மத்திய அரசு எதைக் கொண்டுவந்தாலும், முதல்வர் பழனிசாமி கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார். இந்தியாவிலேயே இந்தச் சட்டத்தை ஆதரிக்கும் ஒரே விவசாயி முதல்வர் பழனிசாமிதான்.

மத்திய அரசின் வேளாண் மசோதாக்களை கண்டித்து, கரோனா காலத்தில் பிறப்பிக்கப்பட்டுள்ள 144 தடை உத்தரவையும் மீறி தொடர் போராட்டம் நடத்தப்படும். கும்பகோணத்தில் செப்.29-ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டம் நடைபெற உள்ளது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளன என்றார்.

கொமதேக மாநில பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க வேண்டுமென்று அரசு நினைத்திருந்தால், குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படாத பொருட்களுக்கும், விலை நிர்ணயித்து விவசாயிகளின் நஷ்டத்தை தவிர்க்க நடவடிக்கை எடுத்திருக்கலாம்.

புதிய சட்டம் சொல்வதுபோல், இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் விவசாயிகள் தங்கள் பொருட்களை எடுத்துச்சென்று விற்கலாம் என்பது சிறு விவசாயிகளுக்கு சாத்தியமில்லை. அதேபோல், அத்தியாவசிய சட்டத்தில் பாதுகாப்பு கொடுக்கப்பட்ட பொருட்களை விவசாயிகளைத் தவிர வேறு யாரும் இருப்பு வைக்க முடியாது. ஆனால் புதிய சட்டத்தின்படி அனைத்து பொருட்களும் அத்தியாவசியப் பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படும்போது பணம் அதிகம் வைத்திருக்கின்ற பெரிய நிறுவனங்கள் எவ்வளவு வேண்டுமானாலும் எந்த பொருளை வேண்டுமானாலும் இருப்பு வைத்துக் கொள்வார்கள்.

தற்கொலை அதிகரிக்கும்

அதன் மூலம் எல்லா பொருட்களின் விலையும் பெரு நிறுவனங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். விவசாய சட்டங்களில் மாறுதல் செய்வதற்கு முன்பாக அனைத்து மாநில அரசுகள் மற்றும் அந்தந்த மாநில விவசாயிகளிடம் கருத்துக்களை கேட்டு மத்திய அரசு ஆலோசித்து இருக்க வேண்டும். எப்போதும்போல அவசரகதியில் இந்த சட்டங்களை நிறைவேற்றுவதற்கு அரசு முயற்சிப்பது கேடாக முடியும். புதிய வேளாண் சட்டங்களை அமல்படுத்தினால் விவசாயிகள் தற்கொலைச் சம்பவங்கள் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.

மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த மசோதாக்களில் விவசாயிகள் சுட்டிக்காட்டும் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் நாடு தழுவிய அளவில் விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு சந்திக்க நேரிடும் என தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT