வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலினுக்கு விவசாயம் என்றால் என்ன என்பதே தெரியாது என்று பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் விமர்சித்துள்ளார்.
விழுப்புரத்தில் பாஜக மாநில செயற்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்களை தமிழக மக்களுக்கு திரித்து கூறுவதும், அரசியலாக்குவதையும் தான் வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார் எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின். விவசாயம் பற்றி எதுவுமே தெரியாத ஸ்டாலின் வேளாண் மசோதாக்கள் குறித்து பேச அருகதையே இல்லை. மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ஸ்டாலின் ஒரு விவசாயியே இல்லை. அவருக்கு விவசாயம் என்றால் என்ன என்பதே தெரியாது.
கூட்டணியில் தொடர்கிறோம்
ரஜினி கட்சி ஆரம்பித்தால் வரவேற்போம். யார் பாஜக கூட்டணிக்கு வந்தாலும் அரவணைப்போம். தற்போது வரை தேசிய ஜனநாயகக் கூட்டணியிலேயே தொடர்கிறோம். அதிமுகவில் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், பழனிசாமிக்கும் இடையே விரிசல் இருப்பதாக தெரியவில்லை. பெரியாரின் நல்ல கொள்கையை யார் கூறினாலும் ஏற்றுக் கொள்வோம். ஆனால் கடவுள் இல்லை என்பதை ஏற்க முடியாது என்றார்.