அரியலூரில் உயர்நிலை திறன் மேம்பாட்டு மையம் அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை, முதல்வர் பழனிசாமி முன்னிலையில், ராம்கோ சிமென்ட்ஸ் தலைமை செயல் அதிகாரி ஏ.வி.தர்மகிருஷ்ணன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குநர் வி.விஷ்ணு பரிமாறிக் கொண்டனர். உடன் தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல். 
தமிழகம்

கட்டுமானம், உள்கட்டமைப்பு பிரிவில் அரியலூரில் 6 ஏக்கரில் திறன் மேம்பாட்டு மையம்: அரசுடன் ராம்கோ சிமென்ட்ஸ் ஒப்பந்தம்

செய்திப்பிரிவு

கட்டுமானம் மற்றும் உள்கட்ட மைப்பு பிரிவில், உயர்நிலை திறன் மேம்பாட்டு மையம் நிறுவ தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இதுகுறித்து ராம்கோ சிமென்ட்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

நாட்டின் பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டுக்கு அறிவும் திறனும் அவசியம். தொழில்நுட்பம் வேகமாக வளர்ச்சி அடைந்துவரும் நிலையில் சர்வதேச தரத்துக்கு ஏற்ப நமது இளைஞர்களின் திறனும் வளர்ச்சி அடைய வேண்டியது அவசியம்.

ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் ஏற்கெனவே தனது 16 பள்ளிகள், 2 ஐடிஐ, பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி மூலம் ஆண்டுதோறும் 20 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி மட்டு மின்றி திறன் வளர்ச்சிக்கும் உதவி வருகிறது.

தற்போது கட்டுமானம் மற்றும் உள்கட்டமைப்பு துறைக்கான உயர்நிலை திறன் மேம்பாட்டு மையத்தை (ஏஎஸ்டிசி) நிறுவுவதற்காக தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் அரசு வழங்கியுள்ள பொறுப்பை ஏற்க ராம்கோ சிமென்ட்ஸ் தயாராகி உள்ளது.

அரியலூரில் 6 ஏக்கர் பரப்பளவில் உயர்நிலை திறன் மேம்பாட்டு மையம் அமைக்க, முதல்வர் பழனிசாமி முன்னிலை யில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்துடன் ராம்கோ சிமென்ட்ஸ் நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல், தலைமைச் செயலாளர் க.சண்முகம், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறை கூடுதல் தலைமைச் செயலாளர் முகமது நசிமுதீன், தமிழ்நாடு திறன் மேம் பாட்டு கழக நிர்வாக இயக்குநர் வி.விஷ்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT