மதுரை மீனாட்சியம்மன் கோயில் தீ விபத்தில் சேதமடைந்த வசந்தராயர் மண்டபத்தை புதுப்பிக்கும் பணி இதுவரை தொடங்காததால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள கும்பாபிஷேகம் தள்ளிப் போகிறது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றிப் பார்க்கவும், தரிசிக்கவும் வெளிநாடுகளில் இருந்தும், நாடு முழுவதும் இருந்தும் தினமும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக்கோயிலின் கிழக்கு கோபுரம் பகுதியில் உள்ள வீரவசந்தராயர் மண்டபம் 2018-ம் ஆண்டு பிப். 2-ம் தேதி ஏற்பட்ட தீ விபத்தால் சேதமடைந்தது. அப்பகுதியில் இருந்த 40-க்கும் மேற்பட்ட கடைகள் தீப்பிடித்து எரிந்தன.
இந்த மண்டபத்தை அதன் பழமை மாறாமல் முன்பு இருந்ததுபோல் ரூ.20 கோடியில் புனரமைக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டது. இப்பணி தொடங்கினால் புனரமைக்க 2 ஆண்டுகள் ஆகும். அதனால் கடந்த ஆண்டே இப்பணியை தொடங்கி அடுத்த ஆண்டு கோயில் கும்பாபிஷேகத்தை நடத்த கோயில் நிர்வாகம் திட்டமிட்டிருந்தது. ஆனால், மண்டபத்தை புனரமைக்க இதுவரை டெண்டர் விடப்படவில்லை. அதனால், திட்டமிட்டவாறு அடுத்த ஆண்டு கோயில் கும்பாபிஷேகம் நடக்க வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
இது குறித்து கோயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தீ விபத்தில் சேதமடைந்த வீர வசந்தராயர் மண்டபத்தில் சீரமைப்புப் பணிகளை 3 பகுதிகளாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. புனரமைப்புப் பணியில் நாமக்கல் பகுதியில் உள்ள கருங்கற்களை சில குவாரிகளில் தேர்வு செய்து வெட்டி எடுப்பது முதல் பகுதியாகவும், அதை அங்கிருந்து கோயிலுக்கு எடுத்து வருவதை மற்றொரு பகுதியாகவும், கட்டுமானப் பணியை மூன்றாவது பகுதியாகவும் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதற்காக அண்மையில் டெண்டர் விடப்பட்டது. ஆனால், அரசு நிபந்தனைகள் அடிப்படையில் தகுதியான ஒப்பந்ததாரர்கள் கிடைக்கவில்லை.
எனவே மீண்டும் டெண்டர் விடுவதற்கு ஏற்பாடு செய்கிறோம். மண்டபம் சீரமைப்பு, கோயில் கும்பாபிஷேகம் இரண்டையும் சேர்த்து நடத்தவே முடிவு செய்துள்ளோம். அதனால், அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகம் இதற்கு முன் 1923, 1963, 1974, 1995, 2009 ஆகிய ஆண்டுகளில் நடந்துள்ளது. பொதுவாக ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். ஆனால், இடையில் சில காலம் பல்வேறு காரணங்களால் தடைபட்டுள்ளது. கடைசியாக 2009-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. அதன் அடிப்படையில் 2021-ல் நடத்த ஏற்பாடு நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. தற்போது வீர வசந்தராயர் மண்டபம் புனரமைக்கும் பணி தாமதமாவதால் கும்பாபிஷேகமும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.