தமிழகம்

மதிமுக-வில் ‘சீனியர்’களை மாற்றிவிட்டு இளைஞர்களுக்கு புதிய பதவி: மதுரை பொதுக்கூட்டத்தில் வைகோ அறிவிப்பு

செய்திப்பிரிவு

மதிமுக-வில் வேகமாக செயல்படாத மூத்த நிர்வாகிகளுக்கு பதிலாக இளைஞர்களுக்கு அப்பதவிகளை தரப் போவ தாக வைகோ தெரிவித்தார்.

மதுரையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மதிமுக 21-வது ஆண்டு தொடக்க விழாவில் வைகோ பேசியதாவது:

கட்சியை தோல்விகள் சூழ்ந்தபோதும், சுற்றியுள்ள கட்சியினர் திடீர் பணக்காரர்கள் ஆனபோதும் இந்த கட்சியில் தொடர்ந்து 20 ஆண்டுகள் இருந்ததே தியாகம்தான். 20 ஆண்டுகள் என்னுடன் பணியாற்றியவர்களுக்கு நன்றி. இதைச் சொல்லி திருப்தி அடைந்துவிட்டால் நம் இலக்கை அடைய முடியாது. இனி வேகமாக, நான் எடுக்கும் முடிவுகளின் வேகத்துக்கு ஈடுகொடுப்பவர்கள் அந்தப் பதவியில் இருங்கள். இல்லாவிட்டால் புதிய இளைஞர்களுக்கு வழிவிடுங்கள். இந்தக் கூட்டம் மூலம் தமிழகம் முழுவதும் உள்ள நிர்வாகிகளுக்கு இதைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

புதிய வாக்காளர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்களிடம் நம்மீது நல்லெண்ணம் இருக்கிறது. அவர்கள் இயக்கத்தின் செயல்வீரர்களாக வர வேண்டும். அவர்களை அரவணைத்து பற்றிக் கொள்ளுங்கள். புதிய இளைஞர்கள் வந்து வேலை செய்யட்டும். பொறுப்பில் இருந்து எடுத்துவிட்டாரே என வருத்தப்படக் கூடாது. 2016-ல் தமிழக அரசியல் அதிகாரத்தை எப்படி கைப்பற்றுவது என்பதைக் கருதித்தான் முடிவு எடுக்கப்படும். கட்சிக்காக உழைத்த எவரையும் எப்போதும் மறக்க மாட்டோம். நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம். இவ்வாறு வைகோ பேசினார்.

வைகோ மேலும் பேசும்போது, கட்சித் தொண்டர்கள் இல்ல நிகழ்ச்சிகளில் என்னைவிட அதிக அளவில் பங்கேற்ற தலைவர் யாரும் இருக்க முடியாது. இனி கல்யாணம், வீடு திறப்புக்கு கூப்பிடுவதை இதோடு விட்டுவிடுங்கள். அந்த நிகழ்ச்சிகளுக்கு வருவதால் நாள் முழுவதும் வீணாகிவிடுகிறது. அதே நேரத்தை தாயகத்தில் இருந்து பணியாற்றினால் கட்சியின் வளர்ச்சிக்குப் பாடுபட முடியும். எனக்கு ஓய்வே வேண்டாம். ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் அழைப்பதைத் தவிருங்கள் என்றார்.

SCROLL FOR NEXT