பருவமழை காரணமாக மகாராஷ்டிர மாநிலத்தில் வெங்காயம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், ஓசூர் பத்தலப்பள்ளி சந்தைக்கு வரத்து குறைந்துள்ளது. இதனால் வெங்காயம் விலை ஒரு கிலோ ரூ.40 முதல் ரூ.50 வரை உயர்ந்துள்ளது.
ஓசூர் – கிருஷ்ணகிரிதேசிய நெடுஞ்சாலையில் உள்ள பத்தலப்பள்ளியில் மொத்த வியாபார காய்கறி சந்தை இயங்கி வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் காய்கறி மொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு காய்கறிகள் விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்த சந்தையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை மொத்த வியாபாரத்தில் ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த பெரிய வெங்காயத்தின் விலை தற்போது ரூ.50 வரை உயர்ந்துள்ளது. அதிக விலை கொடுத்து வெங்காயத்தை வாங்கினாலும், மழை வெள்ளத்தில் சேதமடைந்து காயவைக்கப்பட்ட தரமற்ற வெங்காயமே கிடைப்பதால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து ஓசூர் பத்தலப்பள்ளி காய்கறி சந்தை மொத்த வியாபாரிகள் கூறியதாவது:
மகாராஷ்டிரா உள்ளிட்ட வடமாநிலங்களில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக வெங்காயம் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், மகாராஷ்டிராவில் இருப்பில் இருந்த வெங்காயம் மழையில் நனைந்து சேதமடைந்துள்ளது. இவற்றை காய வைத்து விற்பனைக்கு அனுப்புகின்றனர். பத்தலப்பள்ளி காய்கறி சந்தைக்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து ஒரு நாளைக்கு 80 டன் முதல் 100 டன் வரை வெங்காயம் வரத்து இருக்கும்.தற்போது 20 டன் வரை மட்டுமே சந்தைக்கு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த வெங்காயம், தற்போது ஒரு கிலோ ரூ.40 முதல் 50 வரை விலை உயர்ந்துள்ளது.
தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் வெங்காயம் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.