காஞ்சிபுரம் மாவட்ட நியாயவிலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறையை அமல்படுத்த, நேற்று விற்பனையாளர்களுக்கு கருவிகளை வழங்கினார் காஞ்சி மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடை பணியாளர்களுக்கும் பயோமெட்ரிக் முறையை எவ்வாறுபயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சிகளும், விளக்கங்களும் ஏற்கெனவே ஆட்சியர் பா.பொன்னையா முன்னிலையில் அளிக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து இந்தமுறையை காஞ்சி மாவட்டத்தில் உள்ளஅனைத்து ரேஷன் கடைகளில் அமல்படுத்தமுடிவு செய்யப்பட்டு, பயோமெட்ரிக் கருவிகள் நேற்று நியாயவிலைக் கடை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்தக் கருவிகள் உடனடியாக நியாய விலைக் கடைகளில் பொருத்தப்பட உள்ளன.இதன்படி ஸ்மார்ட் ரேஷன் அட்டை வைத்துள்ளோர், தங்கள் கைரேகைகளை இந்தக் கருவியில் வைத்த பிறகே பொருட்களை பெறமுடியும். இந்நிகழ்ச்சியில் வருவாய் அலுவலர் பூ.முத்துராமலிங்கம், வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கமலநாதன், துணை பதிவாளர் கே.மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
இதுகுறித்து மாவட்ட வழங்கல் அலுவலர் கமலநாதனிடம் கேட்டபோது, “பழைய முறையில் ஒருவரின் அட்டையை பயன்படுத்தி வேறொருவர் கூட பொருட்களை வாங்கலாம். இப்போது, அட்டையில் பெயர் உள்ள ஒருவர் கைரேகை வைத்தால்தான் பொருட்களை பெறமுடியும். வேறு யாரும் பயன்படுத்த முடியாது” என்றார்.