தமிழகத்தை புதுமை கண்டுபிடிப்புக்கான மையம் மற்றும் அறிவுக்கான தலைநகரமாக உருவாக்குவதே எங்கள் நோக்கம் என ‘கனெக்ட் 2020’ மாநாட்டு நிறைவு நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக அரசு மற்றும் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) சார்பில் ‘கனெக்ட் 2020’ என்ற 5 நாள்மாநாடு, காணொலி காட்சி மூலம் கடந்த15-ம் தேதி தொடங்கியது. மாநாட்டின் நிறைவு நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வர் பழனிசாமி, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறையால் உருவாக்கப்பட்டுள்ள இணையம் தொடர்பான 3 கொள்கைகளை வெளியிட்டார்.
நிகழ்ச்சியில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
கடந்த 2019-ம் ஆண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில், ஒப்பந்தம் செய்த 81 திட்டங்கள், வணிகரீதியாக உற்பத்தியை தொடங்கிவிட்டன. இதர 191 நிறுவனங்களின் பணிகள் பல்வேறு நிலைகளில் உள்ளன. இதுதவிர, எனது அமெரிக்க, ஐக்கிய அரபு அமீரக பயணங்களின்போது ரூ.19ஆயிரம் கோடி மதிப்பிலான 63 திட்டங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதன்மூலம் புதிதாக 83,300 வேலைவாய்ப்புகள் உருவாகும். கரோனா ஊரடங்கு காலத்திலும் ரூ.31,464 கோடி மதிப்பிலான 42 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்மூலம் 69,712 வேலைவாய்ப்புகள் உருவாகும்.
தமிழகத்தில் எளிதாக தொழில்தொடங்கும் வகையில், ஆன்லைன்ஒற்றை சாளர அனுமதி முறை உள்ளிட்ட வசதிகளை அரசு ஏற்படுத்தியுள்ளது. இதனால் சிறந்த நிர்வாகம், ஏற்றுமதி மற்றும் முதலீட்டுக்கான ஆற்றல் குறியீடுகளில் தமிழகம் முதல்நிலையில் உள்ளது.தகவல் தொழில்நுட்பம், அது சார்ந்த சேவைகள் பிரிவில் தமிழகம் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக உள்ளது. தகவல் தொழில்நுட்ப பிரிவில் முதலீட்டுக்கான தேர்வு செய்யும் இடமாக தமிழகம் உள்ளது. இதுதவிர, தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்பை தொடர்ந்து மேம்படுத்தி, பல்வேறு சேவைகள் மக்களுக்கு கிடைக்க அரசு வழிவகை செய்து வருகிறது.
திறன்மிக்க மனித வளம்
பல்வேறு துறைகளில் உலகத்தரம்வாய்ந்த கல்வி நிறுவனங்களை நிறுவுதல், மாநிலத்தில் உள்ள திறமைவாய்ந்த மனிதவளத்தின் மூலம் ‘புதுமை கண்டுபிடிப்புக்கான மையம் மற்றும் அறிவுக்கான தலைநகரமாக’ தமிழகத்தை உருவாக்குவதே அரசின் இலக்காகும். இந்த நிலையை அடைய, திறன்வாய்ந்த பணியாளர்கள் தேவையை பூர்த்தி செய்ய தகவல்தொழில்நுட்ப திறன் கொண்ட மனித வளத்தை உருவாக்குவோம்.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் சேவைகள் பிரிவில் அதிக அளவில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், 8 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சென்னையிலும், இரண்டாம் நிலை நகரங்களிலும் எல்காட் நிறுவனத்தால் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் பின்டெக் சிறப்பு மையம், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பிரிவில் சிறப்பு மையம் ஆகியவை உருவாக்கப்பட்டுள்ளன.
அதிவேக இணைய இணைப்பு
அரசு சேவைகளில் புரட்சி ஏற்படுத்தும் விதமாக, மக்களை தேடி அரசு சேவைகள் செல்லும் வகையில், மாநில குடும்ப தரவு தொகுப்பு மற்றும் நம்பிக்கை இணைய கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டு, அறிவு ஆதார அடையாள அடிப்படையிலான சேவை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஐ.நா. சபையின் நிலைத்த வளர்ச்சி இலக்குகளை அடையும் வகையில்,பாரத்நெட் மற்றும் தமிழ்நெட் திட்டங்கள் மூலம் 12,524 கிராமபஞ்சாயத்துகளையும் குறைந்தபட்சம் ஒரு ஜிபிபிஎஸ் அதிவேக இணைய இணைப்பு மூலம்இணைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் நாட்டிலேயே சர்வதேச தகவல் தொழில்நுட்ப மையமாக தமிழகம் திகழும். இந்த பயணத்தில் சிஐஐ பங்கேற்க வேண்டும். இதன்மூலம் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் தொழில் ரீதியிலான சிக்கல்களை தீர்க்க முடியும்.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர்க.சண்முகம், தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் ஹன்ஸ்ராஜ் வர்மா, தமிழ்நாடு மின்னணு நிறுவன மேலாண் இயக்குநர் எம்.விஜயகுமார், மின்ஆளுமை ஆணையர் சந்தோஷ் கே.மிஸ்ரா, சி-டாக் நிறுவன இயக்குநர் எல்.ஆர்.பிரகாஷ், சிஐஐ தமிழ்நாடு பிரிவின் தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.